சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிற நாடுகளில் உள்ள சட்டங்களை போல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் பிறந்தால் மட்டும் அவருக்கு குடியுரிமை கிடைக்காது.
சுவிஸில் குடியேறிய தாத்தா/பாட்டி அல்லது தந்தை/தாய் ஆகியவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறவில்லை என்றால், இவர்களின் சந்ததியினர் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இந்த மூன்றாம் தலைமுறையினர் சுவிஸில் பிறந்திருந்திருந்தாலும் கூட அவர்களுக்கு குடிமக்களை போல் குடியுரிமை வழங்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், சுவிஸின் சட்டத்துறை அமைச்சரான Simonetta Sommaruga என்பவர் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, ‘சுவிஸில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எளிதாக குடியுரிமை பெறுவதற்கு வசதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் குடிமக்களை போல் மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்களும் சமூக நடவடிக்கைகளில் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர்.
எனவே, இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்’ என அமைச்சர் பேசியுள்ளார்.
எனினும், மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது..,
- மூன்றாம் தலைமுறையினர் சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்திருக்க வேண்டும்.
- சுவிஸில் 5 ஆண்டுகள் வரை பாடசாலைக்கு சென்றுருக்க வேண்டும். சுவிஸில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றுருக்க வேண்டும்.
- சுவிஸ் குடிமக்களுடன் நெருங்கி பழகுவதுடன், நாட்டின் இறையான்மையை மதிக்க வேண்டும். தேசிய மொழியை கற்றிருக்க வேண்டும்.
- மூன்றாம் தலைமுறையினரின் தந்தை அல்லது தாய் சுவிட்சர்லாந்து நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவராவது குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பாடசாலை சென்றிருக்க வேண்டும்.
- மூன்றாம் தலைமுறையினரின் தாத்தா அல்லது பாட்டி ஆகிய இருவரில் ஒருவராவது சுவிஸில் பிறந்திருக்க வேண்டும் அல்லது சுவிஸில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றுருக்க வேண்டும்.
- அதே சமயம், மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்யும்போது அவருக்கு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது என்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தற்போது சுவிஸில் 9 முதல் 25 வயதுடைய மூன்றாம் தலைமுறையினர் 24,650 பேர் உள்ளனர். எனினும், இந்த மூன்றாம் தலைமுறையினருக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி 12-ம் திகதி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துவிட்டால் மூன்றாம் தலைமுறையினருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.