இந்திய மிகப்பிரபலமான குடும்பங்களான நவாப் பட்டோடி – ராஜ் கபூர் குடும்பத்தை சேர்ந்த நடிகர் சயீப் அலிகான் – நடிகை கரீனா கபூர் இருவரும் திருமணம் செய்து வாழ்கிறார்கள்.
இந்த நட்சத்திர ஜோடிக்கு நேற்று காலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பெற்றோர்கள் குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்கள் அது மிகப்பெரிய சர்ச்சையை இரண்டு நாளாக கிளப்பி வருகிறது. நேற்று முழுவதும் ட்விட்டரில் #taimualikhan என்கிற ஹேஷ்டேகில் குழந்தைக்கு வாழ்த்துக்களும், அந்த பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதில் பாஜக ஆதரவு ஆட்களும் களமிறங்கி தங்கள் பங்கிற்கு கருத்துக்களை எழுதிக்கொண்டிருந்த போது, இஸ்லாமிய தரப்பிலிருந்தும் ” ஹிட்லர் என்று பெயரிடுவது எப்படி நாகரீக சமூகத்தில் தவிர்க்கப்பட வேண்டியதோ அது போல இதுவும் தவிர்க்கபட்டிருக்க வேண்டும்” என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அரபி மொழியில் ‘தைமூர்’ என்றால் இரும்பு என்று பொருள். சரி யார் இந்த தைமூர் ஏன் இத்தனை அலறல்?
தைமூர் – 700 ஆண்டுகள் ஆகியும் இந்த பெயரைக்கேட்டால் இன்னமும் இந்தியர்கள் மனதில் ஒரு அச்சமும் நடுக்கமும் ஏற்படத்தான் செய்கிறது. 1398-ல் துருக்கி-மங்கோலிய எல்லை நகரமான சாமர்கண்டிலிருந்து படையெடுத்து வந்த மன்னன் தான் இந்த தைமூர். அவன் படை கடந்து வந்த பாதையை எளிதாக அடையாளம் காணலாம்.
ஆம், அந்த பாதை வெகு நிச்சயமாக ரத்தவாடை வீசும் ஒன்றாகத்தான் இருக்கும். தைமூரின் டெல்லி படையெடுப்பு குறித்து ஜுனியர் விகடனில் தொடராக வெளியாகி இன்று வரை பரபரப்பான விற்பனையில் இருக்கும் ‘வந்தார்கள் வென்றார்கள்’ தொடரில் இருந்து சில வார்த்தைகள்.
“ஆனால், வாசகர்கள் சற்று மனதைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டும். தைமூரின் கொலை வெறியை அருகில் இருந்து காண நெஞ்சுரம் தேவை! ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலின் வடக்கில், முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில், இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சாமர்கண்ட் துருக்கிய – மங்கோலிய இனத்தைச் சேர்ந்த தைமூரின் தலைநகரம் அதுதான்.
சாமர்கண்டிலிருந்து கிளம்பிய தைமூரின் மாபெரும் படை முதலில் பாக்தாத் நகரைச் சூறையாடியது. பிறகு பாரசீகம். வெறியும் வேகமும் கொண்ட தைமூரின் வீரர்கள் பாரசீகத்தைப் பந்தாடினார்கள். கொடூரக் களிப் புடன் அவர்கள் வெட்டி வீழ்த்திய மனிதத் தலைகளின் எண்ணிக்கை சுமார் எழுபதாயிரம். அவற்றைக் குவித்து நூற்றுக்கணக்கான ‘மனிதத் தலைப் பிரமிடுகளை உருவாக்கிய பிறகே தைமூர் பாரசீகத்தைவிட்டு வெளியேறினான்.
அடுத்தபடி ரஷ்யா, மாஸ்கோவுக்குள் புகுந்து சூறையாடிவிட்டு சில நாட்கள் ஒய்வெடுத்துக் கொண்டு நேராக இந்தியாவை நோக்கி அவன் படை முன்னேற ஆரம்பித்தது. இலக்கு – அவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த டெல்லி, ‘இந்தியாவை நோக்கி தைமூரின் படை முன்னேறிய வேகத்தோடு பறவைகள்கூடப் போட்டியிட முடியவில்லை’ என்று சரித்திர ஆராய்ச்சியாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
செப்டம்பர் 22 ஆண்டு 1398 தைமூரின் படை சிந்து நதிக்கரையோரம் வந்துசேர்ந்தது” என்று எழுதப்பட்டுள்ள தைமூரின் வருகை அதன் பின்னரே நரவேட்டையில் இறங்குகிறது.
“எது எப்படியோ, அடுத்த பத்து நாட்கள் தைமூரின் படை டெல்லியில் நடத்திய வெறியாட்டத்துக்கு இணையாக சரித்திரத்தில் மிகச் சில நிகழ்ச்சிகளையே குறிப்பிட முடியும். அவன் ஆணை பிறப்பித்த சில மணி நேரங்களில் டெல்லியில் திரும்பிய பக்கமெல்லாம் வெட்டுப்பட்ட உடல்கள் குவிந்தன. சாமான்யன் வீட்டிலிருந்து சகல வசதிகளும் கொண்ட மாளிகை வரை எதையும் தைமூரின் வீரர்கள் விட்டுவைக்கவில்லை.
ஆசைதீரச் சூறையாடிவிட்டுத் தீவைத்தார்கள். டெல்லியில் அந்தக் கொடுங்கோலனின் படையினர் வெட்டிச் சாய்த்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சம் பேர் (ஒரு லட்சத்திலிருந்து ஐத்து லட்சம் வரை கணிப்புகள் வேறுபடுகின்றன!).
எங்கு பார்த்தாலும் தீச்சுவாலைகள் பேயாட்டம் போட, பிரமாண்டமாகச் சூழ்ந்த புகை மண்டலத்தில் டெல்லி மாநகர் சுடுகாடாக மாறியது. ஊருக்கு வெளியே கூடாரத்தில் அமர்ந்து தொடர்ந்து ஒயின் குடித்துக் கொண்டிருந்தான் தைமூர். அப்போது உள்ளே வந்த ஒரு தளபதி, “இந்தியர்களுடைய தங்க ஆபரணங்களைக் கைப்பற்ற வீட்டுக்குள் புகுந்து தேடி அலையவேண்டிய அவசியமேயில்லை.
இந்த நாட்டில் வேலைக்காரப் பெண்கள்கூடத் தங்க நகைகள் அணித்துகொண்டுதான் நடைபோடுகிறார்கள்!’ என்று தலைவனிடம் தகவல் சொல்லிவிட்டு ஆர்வத்துடன் திரும்பி ஓடினான். இடைவேளைகூட விடாமல் பத்து நாட்கள் தைமூரின் வீரர்கள் தங்கள் கத்திகளை ரத்தத்தில் நனைத்த பிறகு ஒருவழியாக ஓய்ந்தார்கள்.
தொடர்ந்து, தைமூரின் முன் ஆயிரக்கணக்கான கைதிகள் கொண்டுவத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை உணர்ச்சியில்லாமல் பார்வையிட்ட தைமூர், “இவர்களிலிருத்து சிற்பிகளையும் ஒவியர்களையும் கட்டடக் கலைஞர்களையும் தனியாகத் தேர்ந்தெடுத்து அப்புறப்படுத்துங்கள். நாம் கைப்பற்றிய யானைகளுடன் அவர்களும் நம் ஊருக்குக் கொண்டு செல்லப்படுவார்கள், எதற்கும் உபயோகமில்லாத மற்றவர்கள் தலைகள் வழக்கம்போல சீவப்படலாம்’ என்று உறுமினான்.
யானைகள் மீதும் ஒட்டகங்கள் மீதும் ஏற்றப்பட்ட பொக்கிடித்தோடு தைமூரின் படை டெல்லியை விட்டுக் கிளம்பியது. பறவையின் வேகத்தில் உள்ளே நுழைந்த அதே படை இப்போது டெல்லியில் சூறையாடப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் எடை தாங்காமல் நத்தையாக கார்த்ததாகக் கேள்வி. தைமூர் வெளியேறிய பிறகு இரண்டு மாதங்களுக்கு டெல்லியில் யாருமே நடமாடவில்லை.
துண்டம் துண்டமாகக் கிடந்த உடல்களை அப்புறப்படுத்தக்கூட ஆள் இல்லாமல் ஊரே நாறிப்போனது. தொலைதூரத்திலிருத்து பார்த்தால், ஆயிரக்கணக்கில் வல்லூறுகளும் காகங்களும் வட்டமடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இரவு நேரத்தில் நரிகளின் வளையும் கழுதை புலிகளின் வெறிச் சிரிப்பும் காற்றில் மிதிந்து வந்தன என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.”
இந்த பெயரைத்தான் கரீனா கபூர்- சயீப் அலிகான் ஜோடி தங்களின் குழந்தைக்கு வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் இந்த உஸ்பெக்கிஸ்தானை சேர்ந்த கொடுங்கோலன் தைமூரை குறிப்பிட்டு வைத்துள்ளார்களா? அல்லது தைமூர் என்றால் ‘இரும்பு’ என்கிற அரபி மொழியில் வைத்துள்ளார்களா என அவர்களே விளக்கம் அளிக்கும் வரை சர்ச்சை தொடரும் என்று தெரிகிறது.