சுவிஸ் மக்கள் இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்கள் அல்லாத நாடுகளில் இருந்து விதைகள், பழங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருட்களை எடுத்துவர உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைட்டோசானிட்டரி சான்றிதழ் என அறியப்படும் அந்த ஆவணம் சமர்ப்பிக்க தவறும் பயணிகளிடம் இருந்து 10,000 பிராங்குகள் வரை அபராதம் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெளிநாடுகளுக்கு விடுமுறையை கழிக்க செல்லும் மக்கள் அங்குள்ள உள்ளூர் விதைகள், பழங்கள் அல்லது காய்கறிகளை வாங்கிவருவது வழக்கம்.
எகிப்திலிருந்து ஆரஞ்சு, மொராக்கோவிலிருந்து அத்தி அல்லது துருக்கியிலிருந்து ஆலிவ் என இந்த பட்டியல் நீளுகிறது.
ஆனால் தற்போது அந்த நடவடிக்கைகளை முறைப்படுத்தியுள்ளனர். இனிமேல், இவ்வாறான விதைகள் அல்லது பழங்களை எடுத்துவரும் பயணிகள், அதற்கு உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் குறிப்பாக ஆபத்தானதாகக் கருதப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களால் காய்கறி அல்லது பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்படவில்லை என்பதை இது சான்றளிக்கிறது.
பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் phytosanitary சான்றிதழ் வழங்க ஒரே ஒரு அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது.
இது பெரும்பாலும் சுற்றுலாதலங்களின் அருகாமையில் இருப்பதில்லை. எனவே ஒரு சான்றிதழ் பெற நீண்ட நேரம் ஆகலாம்.
மட்டுமின்றி, பொருட்களை சோதித்து முறையான சான்றளிக்கவும் கால தாமதமாகலாம். மேலும், சான்றிதழுக்கான கட்டணமும் 50 -ல் இருந்து பல நூறு பிராங்குகள் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பெடரல் சுங்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதுபடி, குறிப்பாக சூரிச் மற்றும் ஜெனீவாவில், விடுமுறை சென்று திரும்பி வருபவர்கள் சட்டவிரோதமாக தாவரங்கள், பழங்கள் அல்லது காய்கறிகளை சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வருவது வாடிக்கையான ஒன்று என தெரிவிக்கின்றனர்.