கவனம் மட்டும் நம் குழந்தைகளுக்கு இருந்து விட்டால் எதையும் சாதித்து விடுவார்கள். ஆனால் நம் குழந்தைகளின் கவனமோ ஒரு நொடியில் ஓராயிர விஷயங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். மற்ற எல்லா விஷயத்திலும் குறையேதும் இல்லாத குழந்தைகளும் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நீடித்த கவனத்தைப் பொறுத்தே படிப்புத் திறன் அமைகிறது. சிறு வயதிலிருந்தே நீடித்த கவனத் திறனை வளர்த்துக் கொண்ட குழந்தைகள் பெரியவர்களானாலும் அத்திறன் தொடரும்.
மேற்கண்ட காரணங்களினால் கவனச் சிதறலைக் கொண்ட குழந்தைகளுக்கு தீர்வு என்ன?
* கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் படிக்கும் போது பெற்றோர் உடனிருப்பது அவசியம். குழந்தை படித்து முடிக்கும் வரை கூடவே அமர்ந்திருக்க வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் விஷத்தில் குழந்தை கவனம் செலுத்துவதாக தெரிந்தால் உடனே அதை விடுத்து படிக்கத் திரும்பும் படி குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும்.
* குழந்தைகள் படிக்கும் போது சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். அவைகளுக்கு தடை கற்கள் (Road Blocks) என்று பெயர். முடிந்த வரை படிக்கும் சூழல் தடைக்கற்கள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படிக்கும் சமயத்தில் சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் படிப்பை துரிதப்படுத்தும். அது போன்றவைகளுக்கு தூண்டிகள் (Triggers) என்று பெயர். அதிகளவு தூண்டிகள் படிக்கும் சூழலில் இருப்பது நல்லது. காற்றோட்டத்தை அளிக்கும் மின்விசிறி, தண்ணீர் பாட்டில் போன்றவை தூண்டிகள் பட்டியலில் அடங்குபவை.
* படிக்கும் சமயத்தில் பெற்றோர் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அணைத்து விடுவது நல்லது. முடிந்தவரை வீட்டில் பிற வேலைகள் நடப்பதை குறைத்து விடுவது அவசியம்.
* படிக்கும் குழந்தைகளின் கவனம் பல விஷயங்களிலும் அலைந்து பெற்றோரிடம் ஏதேனும் பேச முற்படுவர். அவற்றை பின்னர் கேட்பதாக கூறி படிப்பதை தொடரச் செய்ய வேண்டும். படித்து முடித்தவுடன் குழந்தை சொல்ல வந்த விஷயத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொள்ளலாம்.
* கவனச் சிதறல் கொண்ட குழந்தைகளை அதிகாலையில் படிக்க வைப்பது நல்லது. மற்றவர்கள் உறங்கி கொண்டிருக்கும் அமைதியான சூழலில் இடைஞ்சல்கள் குறைவாக இருக்கும்.
இந்த முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளின் கவன சிதறலை பெருமளவு குறைக்க முடியும்.