பேஸ்புக் நிறுவனம் பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்யும் முறைக்கு மாற்றாக மொபைல் எண்ணை பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு பல புதிய அப்டேட்களை அளித்து வருகிறது.
பேஸ்புக் மெசென்ஜரில் க்ரூப் வீடியோ அழைப்பு செய்யும் வசதி, நண்பர்களுக்கு விடுமுறைக்கால வாழ்த்து தெரிவிக்கும் வசதி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது பேஸ்புக். மேலும், பதிவுகளின் பின்னணி நிறத்தை மாற்றுவது, ஆடியோ ஸ்ட்ஃரீமிங் செய்வது ஆகியவற்றை இணைக்கவும் சோதனை நடத்தி வருகிறது.
இதனிடையே, பேஸ்புக் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்ய மொபைல் எண்ணை பயன்படுத்தும் மாற்று வழியையும் புதிய அப்டேட் மூலம் அறிமுகம் செய்துள்ளது.
அக்கவுண்ட் கிட் என்ற இந்த அம்சத்தின் மூலம் மொபைல் எண்ணை பேஸ்புக் கணக்குடன் பதிவுசெய்துவிட்டால் பாஸ்வேட் பயன்படுத்தி லாக் இன் செய்யத் தேவையில்லை.
மொபைல் எண் மட்டும் டைப் செய்து பேஸ்புக் லாக் இன் செய்யலாம். ஏற்கெனவே, பேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை அளித்திருந்தால், அக்கவுண்ட் கிட்டில் பதிவுசெய்யும் மொபைல் எண்ணும் அந்த எண்ணும் ஒன்றாக பொருந்துகிறதா என்று சோதிக்கும். பொருந்தும் பட்சத்தில் உடனே லாக் இன் ஆகிவிடும்.
இல்லையெனில், ஓ.டி.பி. (OTP) பாஸ்வேட் அந்த மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் உள்ள ஓ.டி.பி. எண்ணை தானே உள்ளீடாக எடுத்துக்கொண்டு லாக் இன் ஆகிவிடும்.
பின்னர், அந்த மொபைல் எண்ணை மட்டுமே டைப் செய்து லாக் இன் செய்யலாம், பாஸ்வேர்ட் தேவையில்லை.