அழகு என்று வந்துவிட்டால் அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அதற்காக அவர்கள் அனைத்து வழிமுறைகளையும் செய்து பார்த்துவிடுவார்கள். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். இந்த பழமொழியின் படி பார்த்தால் ஒருவரின் முக அழகை நிர்ணயிப்பது உள்ளத்தின் நல்ல எண்ணங்கள் தான்.
முகத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. இது மிகவும் இயல்பான ஒன்றே. முகத்தை அழகாக்க பல்வேறு அழகு சாதனங்களும், வீட்டு முறைகளும் இருக்கின்றன.
இந்த அழகியல் குறிப்புகள் எல்லாம் முகம் அழகாக வேண்டும் என விரும்புபவர்களுக்கு மட்டும் தான். நாம் செய்யும் அன்றாட செயல்கள் கூட நம் முகத்தின் அழகை கெடுத்து நம்மை வயதான தோற்றமுடையவராக மாற்றுமாம். இந்த பதிவில் நாம் செய்யும் எந்தெந்த செயல்கள் நம் முகத்தின் அழகை கெடுத்து வயதான தோற்றத்தை தருகிறது என்பதை பார்ப்போம்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மிடமே வினைபுரிய தொடங்கும். அதாவது நாம் உண்ணும் உணவு முதல் உறங்கும் பழக்கம் வரை எல்லாமுமே நம்மை சார்ந்தே நடைபெறுகின்றன. அந்த வகையில் செய்கின்ற செயல்கள் நம்மை பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும்.
சூரியனிடம் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள்…!
சூரிய ஒளி உடலுக்கு நல்லதுதான், என்றாலும் இவற்றில் இருந்து வருகின்ற UV கதிர்கள் இளம் வயதிலே வயதான தோற்றத்தை தர கூடியதாம். எனவே, காலை வெயிலில் மட்டும் வெளியில் செல்லுங்கள். மற்ற நேரங்களில் சன்ஸ்கிரீன் லோஷன் தடவி கொண்டு வெளியில் செல்லுங்கள்.
வறட்சியை தவிருங்கள்
முகத்தை எப்போதும் வறட்சியாக வைத்து கொள்ளாதீர்கள். இது முகத்தில் கீறல்கள், கோடுகளை ஏற்படுத்த காரணமாக கூடும். எனவே, முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ளுங்கள். அதற்காக கற்றாழை போன்ற இயற்கை மூலிகைகளை 2 நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் பூசி வாருங்கள்.
சர்க்கரை வேண்டாம்…!
உங்களை முதுமையானவராக காட்டுவதில் முதன்மையான இடத்தில் இருக்கிறது இந்த சர்க்கரை. இவற்றில் விரைவிலே முதிர்ச்சி ஆக்கும் தன்மை அதிகம் உள்ளத்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.
காபி உங்களுக்கு நல்லதா..?
ஒரு சிலருக்கு முகத்தின் தன்மை முற்றிலுமாக மாறி இருக்கும். இதற்கு முழு காரணமும் நாம் எடுத்து கொள்ளும் உணவை பொருத்தே அமைகிறது. அதிகமாக காபி குடிப்பவருக்கு கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, இதனால் விரைவிலே முதுமை வந்துவிடும்.
கொழுப்பு சேர்த்தால் என்னவாகும்..?
உணவில் இரு வகையான கொழுப்புகள் உள்ளது. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என கூறுகின்றனர். கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் செல்களை விரைவிலே சிதைவடைய செய்து, முதிர்ச்சியை தருமாம். எனவே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
உப்பு அளவே வேண்டும்..!
உணவில் அதிகமாக உப்பை சேர்த்து கொண்டால் பல்வேறு பிரச்சினைகளை தரும். ஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். இந்த அளவு அதிகரித்தால் முதுமை நிலை சீக்கிரமாகவே வந்து விடுமாம். எனவே, உணவில் சேர்த்து கொள்ளும் உப்பின் அளவு மிக இன்றியமையாததாகும்.
மது பழக்கம் வேண்டாம்..
உங்கள் சருமத்தை முற்றிலுமாக பாதிக்க செய்யும் தன்மை இந்த மதுவிற்கு உள்ளது. மது பழக்கம் உள்ளவர்கள் மிக விரைவிலே முதுமை அடைந்து விடுவார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, மங்கிய தன்மை, சுருக்கங்கள் ஏற்படுத்தும்.
இரவு தூக்கம் தவிர்க்க வேண்டாம்…
ஒரு மனிதனுக்கு நல்ல உணவும் நல்ல உறக்கமும் மிக அவசியமானதாகும். அதிக நேரம் தூங்கினாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதே போன்று மிக குறைந்த நேரம் உறங்கினாலும் உடலுக்கு பாதிப்பை தரும். இரவு நேர தூக்கத்தின் போதுதான் ஹார்மோன்கள் நன்கு சுரக்க செய்யுமாம். நாம் இரவு தூக்கத்தை தவிர்த்தால் பாட்டி அல்லது தாத்தாவாக, கூடிய சீக்கிரத்திலே மாறிவிடுவோம்.
ஊட்டசத்து அவசியம்…
நீங்கள் சாப்பிடும் உணவில் கட்டாயம் போதுமான அளவு ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் உணவை சாப்பிட்டும் எந்த வித பலனும் இல்லாமல் போய் விடும். குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.