சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகம் இருப்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு 41-வது நாள் கழித்து நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறுகிறது. மண்டல பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு 420 பவுன் எடையுள்ள தங்க அங்கி அணிவிக்கப்படும்.
இந்த தங்க அங்கி பத்த னம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜையையொட்டி இந்த தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இன்று காலை நடைபெற்ற விசேஷ பூஜைகளுக்கு பிறகு புறப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் தொடங்கியது. 25-ந்தேதி பகல் இந்த ஊர்வலம் பம்பை கணபதி கோவிலை வந்தடையும்.
அங்கிருந்து மேளதாளம் முழங்க தலைசுமையாக தங்க அங்கி சபரிமலை கோவில் சன்னிதானத்திற்கு கொண்டுச் செல்லப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ் ணன் நம்புதிரி ஆகியோர் அதை பெற்று 18-ம் படியாக கொண்டுச் சென்று சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
அதன்பிறகு மறுநாள் 26-ந்தேதி மண்டல பூஜைக்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
அப்போது தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனை பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்வார்கள். அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும.
அதன்பிறகு மீண்டும் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு மகர விளக்கு பூஜைக்காக சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.