அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு ’ஸ்கை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று பெற்றோர்கள் முன்னரே திட்டமிட்டிருப்பார்கள். ஆனால் சில குழந்தைகளுக்கு, தனித்தன்மையான பிறப்பின் அடிப்படையிலேயே பெயர் சூட்டி வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ’ஸ்கை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அலாஸ்காவின் கிலென்னலென் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டல் கிக். 8 மாத கர்ப்பிணியான இவர் ஆன்கரேஜ் என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கிறிஸ்டலுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சற்று நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் தாயும் சேயும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விமானத்திலேயே பிறந்த அந்த குழந்தைக்கு ஸ்கை என்று வித்தியாசமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே, குறை மாதத்திலேயே பிறந்ததால், அந்த குழந்தை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.