பூடான் நாட்டில் கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டதையடுத்து முதன்முறையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவி வரும் கொரோனாவால், கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் பூடான் நாட்டில் இதுவரை ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருந்தது.
கடந்த மார்ச் மாதம் பூடான் வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், உடனடியாக தனது நாட்டு எல்லைகளை பூடான் அரசு மூடியது. பூடானில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் குவைத்தில் இருந்து திரும்பிய 27 வயது பூடானிய இளம் பெண் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். முகாமில் இருந்து அவர் வெளியேறிய பின், வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருந்தது. இதனிடையே, அவர் பூடானில் பல இடங்களுக்குச் சென்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தொற்று பரவாமல் இருக்க தேசிய ஊரடங்கை பூடான் அரசு அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடவும், மக்கள் வீடுகளுக்குள்ளேய இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி வாழும் பூடானில், ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.