சட்டதிட்டங்களைக் காரணம் காட்டி மனிதநேயத்தை மறுப்பவர்கள் மீது இயேசுவின் கோபம் எப்போதுமே இருக்கும். தங்களை மதவாதிகளாகவும், கடவுளின் பிரதிநிதிகளாகவும் காட்டிக்கொண்டிருப்பவர்களை அவர் எப்போதுமே எதிர்ப்பார்.
ஓய்வு நாள் என்பது யூதர்களுக்கு மிக முக்கியமான நாள். சட்டத்தின் படி அந்த நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது. ஒரு சின்ன விறகைக்கூட கையில் தூக்கக்கூடாது என்பது அவர்களுடைய சட்டம்.
அப்படி ஒரு ஓய்வு நாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வெளி வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். வயலில் தானியங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன. சீடர்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் அந்தக் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கி ஊதி தானிய மணிகளை உண்டார்கள்.
இயேசுவின் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது. இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாளில் வேலை செய்கிறார்கள்!
அவர்கள் இயேசுவை அணுகினார்கள்.
‘இயேசுவே, இன்றைக்கு ஓய்வு நாள். உங்கள் சீடர்கள் செய்வது என்ன என்பது உங்களுக்குத் தெரிகிறதா?’ பரிசேயர்கள் கேட்டார்கள்.
‘பசியாய் இருப்பதால் சில கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் இதில் என்ன தவறு?’ என்று இயேசு கேட்டார்.
‘மறை நூலை நீங்கள் வாசித்ததில்லையா? ஓய்வு நாளில் உணவு சேகரிப்பது கூட பாவம் என்று மோசே சொல்லியிருக்கிறார்’. பரிசேயர்கள் சற்று எகத்தாளமாய்ச் சொன்னார்கள்.
‘அதே மறை நூலில் நீங்கள் எல்லோரும் புகழ்ந்து பேசும் தாவீது அரசர் செய்த ஒரு காரியமும் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா? அவரும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது ஆலயத்தில் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அற்பண அப்பங்களை உண்டார்கள். இதை நீங்கள் வாசித்ததில்லையோ?’ இயேசு பதிலடி கொடுக்க, பரிசேயர்கள் அமைதியானார்கள்.
‘ஓய்வு நாளில் குருக்கள் ஆலயத்தில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறிய செயலாகாது என்பதையும் திருச்சட்ட நூல் சொல்கிறதே, தெரியாதா?’ என்று இயேசு மீண்டும் கேட்டார்.
‘ஓய்வு நாளில் விருத்த சேதனம் செய்வது கூட பாவமாகாது என்பதாவது தெரியுமா?’ இயேசுவின் தொடர் கேள்விகளால் அவர்கள் மவுனமானார்கள்.
‘ஓய்வு நாள் இருப்பது மனிதனுக்காக, மனிதன் இருப்பது ஓய்வு நாளுக்காக அல்ல. கடவுள் ஓய்வு நாளிலும் பணியாற்றுகிறார்’ இயேசு அதிகாரத் தோரணையில் சொல்லி விட்டு நகர்ந்தார்.
இயேசு அங்கிருந்து நேராக தொழுகைக் கூடத்துக்குச் சென்றார். அங்கும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் குற்றம் ஏதேனும் காணவேண்டும் என்னும் நோக்கில் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே தொழுகைக் கூடத்தில் சூம்பிப் போன கைகளை உடைய ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். இன்று ஓய்வு நாளாயிற்றே, இயேசு அவனைக் குணமாக்குவாரா? ஒரு சண்டைக்குத் தயாராகலாமா? என்று அவர்களுடைய மனம் கேட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் இயேசுவை நோக்கி, ‘ஓய்வு நாளில் ஒருவனைக் குணமாக்குதல் முறையா?’ என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களிடம், ‘நீங்கள் சொல்லுங்கள், எது முறை? நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை? எதை ஓய்வு நாளில் செய்யலாம்? சொல்லுங்கள்’ என்று கேட்டார்.
அவர்களிடமிருந்து பதில் இல்லை.
இயேசு கை சூம்பிப்போன அந்த மனிதரை அழைத்து அவர்கள் நடுவிலே நிறுத்தினார். அவர் வந்து இயேசுவின் முன்னால் நின்றார். பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘உங்களுடைய ஒரே ஒரு ஆடு ஓய்வு நாளில் பள்ளத்தில் விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத் தூக்கி விடுவீர்களா? இல்லை ஓய்வு நாள் முடியும் மட்டும் அந்தக் குழியிலேயே கிடக்கட்டும் என்று விட்டு விடுவீர்களா? தூக்கி விடுவீர்கள் தானே? ஆட்டுக்கே நன்மை செய்ய நீங்கள் நினைக்கும் போது ஆட்டை விட உயர்ந்த மனிதனுக்கு நன்மை செய்ய நான் நினைக்கக் கூடாதா?’ இயேசு அவர்களிடம் கேட்டார்.
அவர்களிடம் பதில் ஏதும் இருக்கவில்லை.
அவர்கள் இயேசுவின் கேள்விகளில் இருக்கும் கூர்மையையும், அவருடைய சட்ட அறிவையும் கண்டு திகைத்துப் போய் பேச்சிழந்து நின்றார்கள்.
‘உன் கையை நீட்டு’ என்று இயேசு கை சூம்பிப் போனவரிடம் சொன்னார்.
அவன் கையை நீட்டினான். கை நேராகிவிட்டது. அவன் மிகவும் ஆனந்தமடைந்து இயேசுவைப் பணிந்து வணங்கினான்.
சட்டங்கள் அல்ல, மனித நேயமே முக்கியம் என்பதை இயேசு மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு தமது செய்கையால் விளக்கினார்.