உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதில், கொரோனா வைரஸின் பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் நியூசிலாந்து ஒன்று.
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தரப்பிலிருந்து கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.
அந்நாட்டில் இதுவரை ஆயிரத்து 122 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் 12 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.