சீரடி சாய்பாபாவின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளாலோ அல்லது எழுத்துக்களாலோ சொல்லி விட முடியாது. அவர் அளவிட முடியாதவர்.
நீங்கள் அவரை சிவனாகப் பார்த்தால் சிவபெருமானாகத் தெரிவார். விஷ்ணுவாகப் பார்த்தால் விஷ்ணுவாகத் தெரிவார்.
குருவாகப் பார்த்தால் குருவாகவும், சித்தராகப் பார்த்தால் சித்தராகவும் அவர் காட்சி அளிப்பார். எங்கும் வியாபித்து நிறைந்துள்ள அவர் ஒவ்வொரு பக்தரின் மனதிலும் உள்ளார்.
அவரைப் புரிந்து கொள்ள மிகவும் பொறுமையும் நம்பிக்கையும் வேண்டும். அவரிடம் பொறுமையோடு காத்திருந்தவர்கள் பெற்ற புண்ணியங்கள் ஏராளம். அந்த புண்ணியங்கள் ஒருவர் இம்மை, மறுமை இரண்டிலும் ஏராளமான பலன்கள் பெற உதவும். பாபாவிடம் நாம் நம்பிக்கையோடு காத்திருந்தால், நமக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். நன்மையாக முடியும்.
அத்தகைய ஒரு நல்ல அனுபவத்தை சீரடி மக்கள் 1910-ம் ஆண்டு கண் கூடாக அனுபவித்தனர். அந்த ஆண்டு வட மாநிலங்களில் ப்ளேக் நோய் எனப்படும் காலரா நோய் பரவி இருந்தது.
சீரடி கிராமத்திலும் காலராவுக்கு பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. எலி மூலம் பரவும் அந்த நோயை குணப்படுத்த முறையான உரிய மருந்து, மாத்திரைகள் அந்த சமயத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.
இதன் காரணமாக காலரா பரவினால் மக்கள் கொத்து, கொத்தாக சாகும் நிலை ஏற்பட்டது. இதனால் ப்ளேக் நோயை அக்கால மக்கள் கொள்ளை நோய் என்றும் அழைத்தனர். காலரா பரவியதால் சீரடி மக்களிடம் கடும் பீதி ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் அனைவருக்கும் சாய்பாபாதான் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்தார்.
பாபாவிடம் போய் கிராம மக்கள் எங்களை காலரா நோய் பிடியில் இருந்து காப்பாற்றுங்கள்’’ என்று முறையிட்டனர். அதைக் கேட்ட பாபா புன்னகைத்தார். அவர் மக்களைப் பார்த்து, “கவலைப்படாதீர்கள்… நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். உங்களைக் காப்பாற்றவே நான் இங்கு வந்துள்ளேன். தீய சக்திகள்தான் இந்த உலகில் நோயை பரப்புகின்றன. அவற்றை ஒழித்து விடலாம்” என்றார்.
மறுநாள்….
பாபா, அதிகாலையிலேயே எழுந்து கடைக்கு சென்று நிறைய கோதுமை வாங்கி வந்தார். மசூதியில் அவர் ஒரு திருகை வைத்திருந்தார். சாக்கை விரித்து அதில் திருகையை வைத்து, கோதுமையை அள்ளிப் போட்டு மாவு அரைக்கத் தொடங்கினார். கல் இயந்திரத்தின் முன்பு கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, தன் நீளமான கப்னி உடையை மடக்கிக் கொண்டு அவர் கோதுமை மாவை அரைக்கும் தகவல் அடுத்த சில நிமிடங்களில் சீரடி ஊர் முழுக்கப் பரவியது.
ஆண்களும், பெண்களும் கூட்டம், கூட்டமாக துவாரகமாயி மசூதிக்கு ஓடி வந்தனர். பாபா மிகவும் ஆவேசத்துடன் மாவு அரைத்தப்படி காணப்பட்டார். அந்த காட்சி சீரடி மக்கள் இதுவரை காணாத காட்சியாக இருந்தது. பாபாவோ அவர்களைக் கண்டு கொள்ளாமல், “ம்…. ஓடு, ஓடி விடு” என்று ஏதேதோ சொல்லியபடி வேகம், வேகமாக கோதுமையை அரைத்து மாவு ஆக்கினார். பாபா ஏன் இவ்வளவு கோதுமையை அரைக்கிறார் என்று சீரடி மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர்களுக்கு எதுவும் புரியவில்லை.
பாபாவோ, தினமும் ஐந்து வீடுகளில் பிச்சை எடுத்து உணவு வாங்கி சாப்பிடக் கூடியவர். உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் பழக்கம் எதுவும் அவரிடம் கிடையாது. பிறகு ஏன் அவர் கோதுமை அரைக்கிறார்? அதற்கான விடை அவர்களுக்கு முதலில் தெரியவே இல்லை.
இந்த நிலையில் பெண்களில் சிலர் பாபாவிடம் சென்று, “ என்ன… பாபா, எங்களிடம் சொன்னால் நாங்கள் கோதுமை மாவு அரைத்து தர மாட்டோமா? எழுந்திருங்கள். நாங்கள் மாவு அரைத்துத் தருகிறோம்” என்றனர். சாய்பாபா அதை ஏற்கவில்லை. “நானே அரைத்துக் கொள்கிறேன்” என்று கோதுமையை அரைத்தார்.
ஆனாலும் அந்த பெண்கள் விடவில்லை. பாபா அருகில் உட்கார்ந்து கொண்டனர். கோதுமையை எடுத்துக் கொடுப்பதும், அரைத்த மாவைத் தள்ளி விட்டுக் கொண்டும் சிறு, சிறு உதவிகளை செய்தனர். அந்த பெண்கள் மீது அன்பு கொண்ட பாபா அவர்களை திட்டவில்லை. அவர்கள் செய்த உதவிகளை ஏற்றுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் கோதுமை முழுவதையும் பாபா மாவாக அரைத்து முடித்தார். அந்த மாவை பாபா நான்கு பங்குகளாகப் பிரித்து தங்கள் நான்கு பேருக்கும் தருவார் என்று அந்த 4 பெண்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆனால் பாபா அவர்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் பொறுமை இழந்த அந்த 4 பெண்களும், பாபா அரைத்த கோதுமை மாவை தாங்களாகவே பங்குப் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். கோதுமை மாவை 4 பங்காகப் பிரித்து மூட்டை கட்டினார்கள்.
அதைப் பார்த்ததும் சாய்பாபா ஆவேசமானார். அந்த 4 பெண்களையும் கோபத்தில் கடுமையாகத் திட்டினார். பயந்து போன அந்த 4 பெண்களும் கோதுமை மாவை கீழே வைத்தனர். பாபா அருகில் சென்று பணிந்து வணங்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர்.
உடனே சாய்பாபா அந்த மாவை 4 பங்காகப் பிரித்து நான்கு பெண்களிடமும் எடுத்துக் கொடுத்தார். “இந்த மாவை சீரடி ஊரின் நான்கு திசைகளுக்கும் சென்று எல்லையில் தூவி விடடு வாருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் அந்த 4 பெண்களுக்கு மட்டுமல்ல, சீரடி ஊர் மக்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பாபா ஏன் மாவை ஊர் எல்லையில் கொட்ட சொல்கிறார் என்பது புரியாமல் தவித்தனர்.
என்றாலும் பாபா உத்தரவை ஏற்று அந்த நான்கு பெண்களும் மாவை எடுத்துச் சென்று எல்லையில் தூவி விட்டு வந்தனர். மறுநாளே…. சீரடி கிராமத்தில் பரவி இருந்த காலரா நோயின் வீரியம் குறைந்தது. காலராவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் நலம் பெற்றனர். அதன் பிறகே பாபா கோதுமை மாவை அரைத்து எல்லையில் தூவியதால்தான் சீரடியில் காலரா நோய் கட்டுப்பட்டது என்ற உண்மை மக்களுக்குத் தெரிய வந்தது.
சாய்பாபா அரைத்தது கோதுமையை அல்ல. அவர் காலராவைத்தான் அரைத்து அழித்துள்ளார். அப்படி அழித்த காலராவை ஊருக்கு வெளியில் கொண்டு போய் கொட்ட செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டனர். பாபா செய்த பரிகாரத்தை நினைத்து சீரடி மக்கள் மெய்சிலிர்த்தனர். அவர்கள் அனைவரும் துவாரகமாயி மசூதிக்கு திரண்டு வந்தனர். பாபாவை வணங்கி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இப்படி காலராவை சீரடியில் இருந்து விரட்டிய பாபா, சிலரது ப்ளேக் நோயை தானே ஏற்றுக் கொண்டும் அற்புதம் செய்தார். அதற்கு அமராவதியை சேர்ந்த தாதாசாகேப் காபர்டே மகனுக்கு ஏற்பட்ட ப்ளேக் நோய் தாக்குதலை உதாரணமாக சொல்கிறார்கள். ஒரு தடவை காபர்டே மனைவி தன் மகனுடன் சீரடிக்கு வந்திருந்தார். சீரடியை விட்டு புறப்பட அவர் முடிவு செய்த போது மகனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு நெறி கட்டி அது பிளேக் நோயாக மாறியது.
காபர்டேயின் மனைவி அலறித் துடித்தாள். அன்று மாலை பாபாவைப் பார்த்து தன் மகனின் நிலைப் பற்றிக் கூறி அழுதாள். அதைக் கேட்ட பாபா அவளிடம், “வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவை உருகி ஓடி விடும். எல்லாம் எளிதாக மாறி விடும்“ என்றார். காபர்டே மனைவி புரியாமல் பாபாவை பார்த்தாள். உடனே பாபா, தன் கப்னி உடையை இடுப்பு வரை உயர்த்திக் காட்டினார்.
அவர் இடுப்புப் பகுதியில் நெறி கட்டிகள் காணப்பட்டன. அவர் காபர்டே மனைவியிடம், “உன் மகனுக்கு ஏற்பட்ட ப்ளேக் நோயை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று சொல்லி விட்டு நடந்தார். அன்றிரவே காபர்டே மகனுக்கு ஏற்பட்ட ப்ளேக் நோய் விலகியது. அவனை நோயின் பிடியில் இருந்து பாபா விடுவித்திருந்தார்.
பஞ்ச பூதங்களும் அவரிடம் கட்டுப்பட்டு இருந்ததால் அவரால் இப்படி அற்புதங்களை நிகழ்த்த முடிந்தது.
அத்தகைய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.