யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு இயந்திரத்திற்கு தவறான காப்புறுதி செய்தமை தொடர்பிலும் அதனால் தற்போதுள்ள நிலைமை தொடர்பாகவும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 2014ஆம் ஆண்டு 380 லட்சம் ரூபா பெறுமதிக்கு புதிதாக கிடைத்த தீ அணைப்பு வாகனத்திற்கு வெறும் 68 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியிடப்பட்டு வருடாந்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா காப்புறுதி செலுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது குறித்த வாகனம் 2020-06-16 அன்று விபத்திற்குள்ளாகி முழுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் இதனை திருத்த கணிப்பிடும் பெறுமதி ஒரு கோடியை தாண்டும் என கருதப்படுகின்றது.
இதனால் ஒரு தொகை நிதி சபையின் பொறுப்பிலேயே செலவிடப்பட வேண்டிய நிலை அதிகாரிகளின் தவறினால் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது . இந்த நிலையில் கடந்த 2020-06-16 அன்று விபத்திற்குள்ளான வாகனமும் இழுத்து வரப்பட்டு சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் குறித்த வாகனம் சபைக்கு கிடைத்து காப்புறுதி செய்யப்பட்ட காலத்தில் சபை இயங்கியுள்ளது. இவ்வாறு தவறான காப்புறுதி செய்யப்பட்ட காலத்தில் மூன்று ஆணையாளர்கள் பதவி வகித்த அதேநேரம் 5 ஆண்டுகள் புதிய வாகனத்திற்கு அதே பெறுமதியிலும் அதன் பின்னர் பெறுமதி மதிப்பிடப்பட வேண்டும் என்ற விதிமுறையும் 2019 முதல் மீறப்பட்டமையினாலேயே இதனை கண்டுகொள்ள முடியவில்லை என்பது சந்தேகத்த ஏற்படுத்துகின்றது.
எனவே குறித்த விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து உரிய நிர்வாக, நிதி நடைமுறைகளிற்கமைய நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான உரிய தீர்வை முன்வைக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு யாழ் மாகரசபை உறுப்பினர் ந.லோகதயாளன் சென்றார்.
இவற்றின் அடிப்படையிலேயே பிரதம செயலாளர் தற்போது மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.