ஆவுடையாருக்கு அபிஷேகம் :
வடதிருமுல்லைவாயில் திருத்தலத்தில் மாசிலாமணி ஈஸ்வரன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவருக்கு, சிவலிங்கத் திருமேனியின் உச்சியில் சாத்தப்படும் சந்தனகாப்பு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மாற்றப்படும். எனவே இந்த லிங்கத்தில் உள்ள ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது. வருடம் ஒருமுறை சந்தனகாப்பு பிரிக்கப்பட்டு, சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
சந்தன பிரசாதம் :
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், மூலவராக வீற்றிருக்கும் முருகனின் உருவச் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். இதனை செய்தருளியவர் போகர் என்னும் சித்தர். நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று, செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. இரவு நேர பூஜையில், முருகனின் நவபாஷாண நிலையின் மீது சந்தனக் காப்பு செய்யப்படும். மறுநாள் காலையில் முருகனின் விசுவரூப தரிசனம் காணும் பக்தர்களுக்கு, சந்தனக் காப்பில் இருந்து எடுக்கப்பட்ட சந்தனம், சிறு வில்லையாக பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
இடைச்சிக் கல் :
தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது, ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆலயப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சிவதொண்டு செய்ய விரும்பினார். அவரது பெயர் அழகி என்பதாகும். இதையடுத்து அந்த மூதாட்டி, தன்னால் இயன்ற தொண்டாக, கோவில் கட்டும் பணியில் இருந்த சிற்பிகளின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு, தயிர், மோர் வழங்கி வந்தார்.
இதையறிந்த மன்னன் ராஜராஜ சோழன், மூதாட்டியின் சிவதொண்டை அனைவரும் அறியும் வகையில், 80 டன் எடை கொண்ட கல்லில் ‘அழகி’ என்ற பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம்பெறச் செய்ததாக கூறப்படுகிறது. அந்தக் கல் ‘இடைச்சிக் கல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கல்லின் நிழலே, கருவறையில் உள்ள இறைவன் பிரகதீஸ்வரரின் மேல் விழுகிறதாம்.
கருட தரிசன பலன் :
விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்றால், அங்கு மூலவரின் எதிரில் கருடாழ்வாரை தரிசனம் செய்யலாம். இந்த கருடாழ்வாரை தரிசனம் செய்வதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் கருடனை வழிபட்டால், நோய்கள் தீரும். திங்கட்கிழமையில் வழிபாடு செய்தால் குடும்ப நலன் உண்டாகும். செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்தால் தைரியம் அதிகரிக்கும். புதன் கிழமை வழிபாடு எதிரிகள் தொல்லையை நீக்கும். வியாழன் அன்று கருடனை தரிசித்தால் ஆயுள் கூடும். வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். சனிக்கிழமை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
மூலவர் சிலைகள் :
சில கோவில்களில் உள்ள மூலவர் சிலைகளில் பலவிதமான பொருட்களால் செய்யப்பட்டதாக தல வரலாறுகள் கூறுகின்றன. அந்த வகையில் உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் உள்ள மூலவர் சிலை, சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது. தஞ்சாவூர் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன் மூலவர் சிலை தங்கத்தால் ஆனது. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சிலை ஆற்று மணலால் அமைந்தது. அதே போல் காஞ்சி அத்தி வரதர் சிலை, அத்தி மரத் துண்டில் வடிக்கப்பட்டுள்ளது. திருவலஞ்சுழியில் உள்ள விநாயகர் சிலை, கடல்நுரையால் செய்யப்பட்டது.