இந்தியாவின், கோவையில் தங்கியிருந்த பாதாள உலகக்குழு தலைவன் அங்கொட லொக்காபயன்படுத்திய துப்பாக்கியை இந்திய சி.பி.சி.ஐ.டி பொலிசார் தேடி வருகின்றனர்.
அங்கொட லொக்கா கோவையில், பிரதீப் சிங் என்ற பெயரில், கடந்த 2018 முதல் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூலை 4ஆம் திகதி, உயிரிழந்த நிலையில் மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரையும் சி.பி.சி.ஐ.டி பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து மூன்று நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
நேற்று அவர்களின் காவல் முடிந்த நிலையில், மதியம் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மூவரிடமும் இரண்டு மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
சி.பி.சி.ஐ.டி பொலிசார் மூவரிடமும் விசாரணை நடத்த மேலும், 10 நாட்கள் காவல் கேட்டு மனு செய்தனர். அதற்கு நீதிபதி மறுத்து மூவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தியானேஸ்வரன் ஈரோடு பெருந்துறையிலும், மற்ற இருவரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சட்டத்தரணி சிவகாம சுந்தரி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கியை தேடும் பொலிசார்!
சி.பி.சி.ஐ.டி பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அங்கொட லொக்கா கோவையில் தங்கியிருந்த போது கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியது விசாரணையில் தெரிந்தது. அத்துப்பாக்கியை கடந்த ஜூலை 5ம் திகதி அங்கொட லொக்காவின் சடலத்தை மதுரைக்கு எடுத்து செல்லும் போது, அங்கிருந்த அவரது கூட்டாளியிடம் கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டிச் சென்ற விசாரணை நடத்த கால அவகாசம் இல்லாததால், மேலும், 10 நாட்கள் காவல் கேட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ க்கு கொரோனா
அங்கொட லொக்கா வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி யின் ஏழு தனிப்படை பொலிசார் விசாரித்து வருகின்றனர். ஒரு தனிப்படையில் பணிபுரிந்து வரும் 54 வயது சிறப்பு எஸ்.ஐ க்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.