யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்துள்ளனர்.
கீரிமலை பகுதியின் ஜே/226 ,ஜே/225 ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.
அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.
முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த ராணுவத்தினரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று அவ்விடத்து மக்களிடம் கூறி உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னாள் போராளிகளின் விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளமை முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அண்மைய வாரங்களில் யாழ் குடாநாட்டில் பரவலாக முன்னாள் போராளிகளின் விபரங்கள் கிராமசேவகர்கள் ஊடாக மீள இராணுவத்தால் திரட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.