மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பெற்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 13ஆவது பிரதமராக பதவியேற்றதில் மற்றற்ற மகிழ்ச்சியடைவதாக மீராவோடை பிரதேச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் றபீக் ஏ.கபூர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்குடா மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும்,
இன, மத பேதங்களுக்கப்பால் அமரர் மரியாதைக்குரிய டி.ஏ.ராஜபக்சவினது புதல்வர்களாகிய தங்கள் மீதும் தங்களது சகோதரர்கள் மீதும் நாட்டு மக்கள் கொண்டுள்ள அபார நம்பிக்கை ஒரு போதும் வீண் போகாது.
2000ஆம் ஆண்டு கடற்றொழில் நீரியல் வள அமைச்சராகவிருந்து பிரதியமைச்சராக பதவி வகித்த மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதரூடாக “இன நல்லுறவுப்பாலம்” வேலைத்திட்டத்தை முன்னெடுத்து இனநல்லுறவுக்கு பாலமாக இருந்தீர்.
இன நல்லுறவுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் காட்டிய அக்கறையும் நீங்கள் மேற்கொண்ட வேலைத்திட்டமும் தங்களுடைய பரம்பரையிலும் இனவாதமில்லை என்பதை பறைசாற்றியது.
பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட தங்கள் ஆட்சியினை இனவாத சக்திகள் கவிழ்த்து, சிறுபான்மையினர் மனதில் இனவாதத்தை விதைத்து இடைவெளியை ஏற்படுத்தினர்.
இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியூடாக பிரதமர் அரியாசனத்தை அலங்கரித்து கொண்டிருக்கும் தங்களுக்கு தேகாரோக்கியமும் மன வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எஸ்.வியாழேந்திரன் ஊடாக நாடாளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற கல்குடாத் தொகுதி மற்றும் மட்டக்களப்பு முஸ்லிம்களும் தமது பங்களிப்பினை வழங்கியுள்ளதை நன்றியுடன் நினைவூட்டுகிறேன்.
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத கல்குடா முஸ்லிம் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, கடற்றொழிலாளர், நன்னீர் மீனவர்களின் பிரச்சினைகள், விவசாய மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகள், கோறளைப்பற்று மத்திக்கான எல்லை நிர்ணயம், புதிய பிரதேச சபை உருவாக்கம், மீள்குடியேற்ற வீட்டுத்திட்டங்கள் மற்றும் இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகளை பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியூடாக பிரதமர் அரியாசனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு தேகாரோக்கியமும் மன வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.