ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் இந்த பட்டியல் வெளியிடப்படுமென அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அந்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 02ஆம் திகதி தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 50,000 தொழில் வாய்ப்புக்கள் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 100,000 தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக பல்துறை அபிவிருத்தி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தமையால் இவ்வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.
எனினும் தற்போது தேர்தல் நிறைவடைந்துள்ளதால் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.