இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவியை நண்பருடன் சேர்ந்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் பணம் கேட்டு மிரட்டிய இரு இளைஞர்கள் கைதானதன் பின்னணி வெளியானது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஷரஃபலி மற்றும் ராகேஷ் என்பவர்களே துஸ்பிரயோக வழக்கு தொடர்பில் கோழிக்கோடு பகுதி பொலிசாரிடம் சிக்கியவர்கள்.
தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியே மாணவியிடம் இருந்து பணமும் தங்க நகைகளையும் இருவரும் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
மனமுடைந்த மாணவி ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்யவே, பொலிசாரை நாடிய பெற்றோரின் புகாரின் அடிப்படையிலேயே நேற்று ஷரஃபலி மற்றும் ராகேஷ் என இருவரும் கைதாகியுள்ளனர்.
கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார் குறித்த மாணவி.
தற்போது இணையம் வழி கல்வி என்பதால், தாயாரின் அலைபேசியை அதற்காக பயன்படுத்தி வந்துள்ளார். அலைபேசி பயன்பாட்டில் ஈர்க்கப்பட்ட மாணவி தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் துவங்கியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் புகைப்படங்களுக்கு விருப்பங்கள் குவியவே, ஷரஃபலி என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.
மட்டுமின்றி ஒன்றாக வாழவும் தான் தயார் என ஷரஃபலி வாக்குறுதி அளிக்கவும், 14 வயதேயான குறித்த மாணவி ஷரஃபலியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
இதனிடையே ஒருகட்டத்தில் நேரிடையாக காண வேண்டும் என ஷரஃபலி கோரிக்கை வைக்க, நண்பன் ராகேஷுடன் கோழிக்கோடு சென்று மூவரும் சந்தித்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த மாணவி தோழியை சந்திக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறிக்கொண்டு ஷரஃபலி அழைத்த இடங்களுக்கு எல்லாம் சென்றுள்ளார்.
இதில் ஷரஃபலியின் வாக்குறுதிகளை நம்பி இருவரும் தனிமையில் இருந்துள்ளதுடன், அக்காட்சிகளை ஷரஃபலி வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி மாணவியை மிரட்டி, நண்பன் ராகேஷுக்கும் விருந்தாக்கியுள்ளார். ஆனால் அடுத்த சில மாதங்களில் ஷரஃபலியிடம் இருந்து அலைபேசி அழைப்புகள் குறைந்துள்ளது.
மட்டுமின்றி வீடியோ மற்றும் புகைப்படங்களின் பேரில் ஷரஃபலி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
செய்வதறியாது திகைத்த மாணவி தாயார் அறியாமல் பணமும், நகைகளும் ஷரஃபலிக்கு அளித்துள்ளார்.
இந்த நிலையில், மாணவியின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளதை கவனித்த பெற்றோர், மாணவியுடன் பக்குவமாக கேட்டறிந்துள்ளனர்.
அவர் கூறிய தகவல்கள் கேட்டு உடைந்துபோன குடும்பம், நெருங்கிய உறவினர் ஒருவரின் உதவியுடன் இந்த விவகாரம் தொடர்பில் ஷரஃபலியிடம் விசாரித்துள்ளனர்.
ஆனால் பொலிசாரை நாடினால் விபரீதம் ஏற்படும் என ஷரஃபலி மிரட்டல் விடுக்க, தொல்லை தாங்க முடியாமல் கசாபா பகுதி பொலிசாரை நாடி புகார் அளித்து உதவி கேட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் பாலக்காடு மாவட்டம் சென்று இருவரையும் கைது செய்துள்ளனர்.