சுவிட்சர்லாந்து நாட்டில் காதலியை கொலை செய்துவிட்டு நியூசிலாந்து நாட்டிற்கு தப்பியதாக கூறப்படும் இலங்கை தமிழருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள பேசல் நகரில் இலங்கையை சேர்ந்த 44 வயதான தமிழர் ஒருவர் தன்னுடைய 23 வயதான காதலியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 1998 மற்றும் 2000 ஆகிய இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் திகதி தமிழர் குடியிருந்த வீட்டில் அவரது காதலி கொடூரமான கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
காதலியை கொன்றதாக கூறப்படும் தமிழர் போலி கடவுச்சீட்டு மூலம் நியூசிலாந்து நாட்டிற்கு தப்பியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள Auckland நகரில் குடியேறிய அவர் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளையும் பெற்றார்.
இதனை தொடர்ந்து அவருக்கு 2004-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டு குடியுரிமையும் கிடைத்துள்ளது. மேலும், புதிதாக தொழிலை தொடங்கிய அவர் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 2014-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காதலியின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணு மூலம் தமிழர் தான் கொலையாளி என தெரியவந்துள்ளது.
இத்தகவல் மூலம் நியூசிலாந்து அரசிடம் முறையாக அனுமதி பெற்று 2015-ம் ஆண்டு அவரை சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுவிஸ் பொலிசார் அழைத்து வந்துள்ளனர்.
பின்னர், தமிழர் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
எனினும், தற்போது இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை இல்லை என்றும், குடும்ப தகராறு காரணமாக நிகழ்ந்த எதிர்பாராத விபத்தின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை(வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதால் தமிழருக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.