வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை கோட்டாபய அரசு தடுத்து நிறுத்தி விட்டது, இனரீதியாக ஒதுக்கல் மேற்கொள்கிறது என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது.
வேலைவாய்ப்புக்காக தெரிவானவர்களின் பட்டியல் அரசியல் செல்வாக்கின் மூலமாக தயாரிக்கப்பட்டது என்ற அறிக்கை கிடைக்கப் பெற்றதையடுத்தே, ஜனாதிபதி அதிரடி முடிவெடுத்து, மீளாய்வு உத்தரவை பிறப்பித்ததாக அறிய முடிகிறது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த, க.பொ.த சாதாரணதரம் வரை கல்விகற்ற 100,000 பேருக்கு அரச தொழில் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான தெரிவுகள் இடம்பெற்றன. வடக்கு கிழக்கில் 20,000 பேர் வரையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
நாட்டில் தொழிலற்ற சுமார் 16 இலட்சம் பேர் இருக்கலாமென கருதப்படும் நிலையில், 1 இலட்சம் பேருக்க தொழில் வழங்குவதில் உள்ள எதிர்மறை காரணங்களை கருத்தில் கொண்டு, பொதுத்தேர்தலின் பின்னர் வரை தொழில் வழங்கல் ஒத்தி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், அரச தரப்பின் சில எம்.பிக்கள் அரச அதிகாரிகளின் மூலம் அந்த பட்டியலை பெற்று, தமது பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர்.
மட்டக்களப்பில் பொதுஜன பெரமுன தரப்பில் போட்டியிட்ட சிலர் பொதுத்தேர்தலிற்கு முன்னர் வரை அந்த வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம் என ஒன்றை போலியான நிரப்பினார்கள்.
அனைத்திற்கும் சிகரம் வைத்ததை போல வடக்கில் சுதந்திரக்கட்சியினர் நடந்து கொண்டனர். வேலைவாய்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்தினால் அனுப்பப்பட்ட பட்டியலை பெற்று, தமது அரசியல் நலனிற்காக பயன்படுத்தினார்கள்.
வேலைவாய்ப்பிற்காக தெரிவானவர்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும், அதை கண்காணிக்க தம்மிடம் பொறிமுறையுள்ளது, வாக்களிக்காதவர்கள் வேலைவாய்ப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் சில யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் சுதந்திரக்கட்சியினர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கைகளும் புலனாய்வு பிரிவினரால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேர்மையான முறையில் அரச தொழில் வழங்கப்படும் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமென்ற கொள்ளை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள், ஆனால் வடக்கு கிழக்கில் நிலைமை தலைகீழாக உள்ளது என வேறு பல தரப்புக்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையடுத்து, அரச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி, யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் என்ன நடந்தது என்பதை உறுதிசெய்ய பின்னரே, அந்த பட்டியலை மீளாய்வு செய்யும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என நம்பகரமாக அறிய முடிகிறது.
இரண்டு மாவட்டங்களிலும் மோசமான சில சம்பவங்கள் நடந்துள்ளதால் வடக்கு கிழக்கின் முழுமையான பட்டியலையும் மீளாய்வு செய்யும்படி ஜனாதிபதி அறிவுறுத்தியதாக, ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை- பகிரங்கமாக்காமல்- நிர்வாக மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ளலாமென வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் ஜனாதிபதி நிராகரித்து, இந்த விவகாரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.