இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியின் அங்கம் வகிக்கும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை நாளைய தினம் பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதனிடையே வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களும் உள்ளடங்கும் வகையில், தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பது, கட்சியின் கிளைகளை மறுசீரமைப்பது போன்ற பணிகளை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 20 ஆம் திகதி தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் சந்திப்பில் கூறியுள்ளார்.
தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு வரும் நடவடிக்கைகளை தான் முன்னெடுக்க போவதாகவும் இதற்காக அனைத்து அமைப்பாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டிக்கு தயாராகி விட்டதாக இந்த அரசியல் நகர்வுகள் உணர்த்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.