உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் தங்கியிருந்த இடங்கள் குறித்து கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நிலந்த ஜயவர்தன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இந்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நிலந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி நண்பகலில் தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தரப்பினர் தங்கியிருந்த இடங்கள் குறித்த தகவல்களை அப்போதைய பொலிஸ்மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவுக்கு வழங்கியிருந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நிலந்த ஜயவர்தன ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.
மார்ச் 29ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேசத்தில் சஹ்ரான் மற்றும் அவரது சில உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அப்பகுதியிலுள்ளவர்கள் கண்டிருப்பதையும் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் குழுவினரைக் கண்ட அரேபிய பாடசாலை ஆசிரியரின் தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸ்மா அதிபரிடம் வழங்கியிருந்ததையும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சஹ்ரான் ஹாஸிம் தங்கியிருந்ததாகவும், அவரது தந்தையான கப்பூர் என்பவர் நாரஹேன்பிட்டி பகுதிக்கு சென்று அவரது வான் ஒன்றை விற்பனை செய்து தொலைபேசி இலக்கம் என்பவற்றை மாற்றிவிட்டு சஹ்ரானுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானுடன் இருந்த ரில்வான் என்பவர் ஆரியம்பதி பிரதேசத்திலுள்ள தனது இல்லத்திற்கு சென்றிருந்ததாகவும் நிலந்த ஜயவர்தனவினால் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்பு வழக்கில் பிரதான சந்தேக நபராகிய இப்ராயிம் சாதிக் அல் ஹக் என்பவர் மாத்தளை மருக்கன பிரதேசத்தில் உள்ள சஹ்ரானின் குழுவினருடன் பாசிக்குடா கரையோரப் பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்தமையும் அந்தக் கடிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் பிரதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு வழங்கப்பட்டதாகவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.
இதேவேளை, கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கிய சாட்சிமூலங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.