கல்முனை மாநகர சபையில் ஊழியராக கடமையாற்றியவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கியதாக அதே மாநகர சபை ஒன்றில் கடமையாற்றும் மற்றுமொரு ஊழியர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் உரிய தரப்பினர்கள் இதற்கான நியாயத்தை தனக்கு பெற்றுக்கொடுக்காமல் வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று(21) கல்முனை பஸார் ஜும்மா தொழுகையின் பின்னர் பேரணியாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கல்முனை மாநகர சபையின் முன்றலுக்கு சென்று பல்வேறு கோஷங்களை எழுப்பி நியாயம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவும் பிரசன்னமாகி இருந்தார்.
அத்துடன் தாக்குதலுக்கு உள்ளானவர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் மேற்குறித்த போராட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தனக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.