தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் இறந்த பின்பு அவருக்கு பாரத்ரத்னா விருது கொடுப்பது பற்றி அரசியல் வட்டாரங்களின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தனக்கு இந்த விருதுகள் மீது மதிப்பு கிடையாது என்றும் இந்த நாட்டிற்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்து செக்கிழுத்து இறந்தாரே வஉசி சிதம்பரனாருக்கு கிடைக்காத பாரத் ரத்னா விருது மீது தனக்கு நம்பிக்கை இல்லை என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என கூறினாரே முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு கிடைக்காத விருது, இது போன்று எண்ணற்ற தியாக பெருமக்களுக்கு எல்லாம் கிடைக்காத விருது, இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு கிடைக்கும் போது அதை யாருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் அதற்கு மதிப்பு இல்லை என கூறியுள்ளார்.
தலை சிறந்த தியாகிகளுக்கெல்லாம் கொடுக்காத இந்த விருதுக்கு தான் ஏன் மதிப்பு தர வேண்டும். அது யாருக்கு சென்றால் என்ன, கொடுத்தால் என்ன, கொடுக்கவில்லை என்றால் என்ன அவர்கள் விருப்பு வெறுப்புக்காக கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.