தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஈ.பி.ஸ். சசிகலா மற்றும் பஜாக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் கூட்டணி உள்ளிட்ட சமசர பேச்சுவார்த்தைகள் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கும் இன்னும் 10 மாதங்களுக்கும் குறைவாகவே இருப்பதால், கட்சிகள் அனைத்தும், இந்த கொரோனா காலத்திலும் சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டன.
கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, அடிமட்டத்தில் கட்சிப் பணிகளை துரிதப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வதிடம் ஈ.பி.எஸ். சசிகலா, பாஜக ஆகிய மூன்று தரப்பில் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், இப்போது அதிமுகவிற்கு முதலமைச்சர் வேட்பாளர் தான் இதற்கு எல்லாம் காரணம் என்று கூறப்படுகிறது.
ஓ.பி.எஸை பொறுத்தவரை தற்போது வரை நம்பர் 2 என்ற இடத்திலேயே தான் இருக்கிறார்.
ஜெயலலிதா இருக்கும் போதே முதல்வராக இருந்த நமக்கே 2-ஆம் இடம் என்பதால், வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் தீர்மானமாக இருக்கிறாராம்.
அதிமுகவிற்குள் தற்போது இடைக்காலமாக சமரசம் ஏற்பட்டாலும், முதல்வர் பதவியை அவர் விட்டுக் கொண்டுக்க முன் வரவில்லை என்று ஓ.பி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் சமரசம் பேசப்பட்டுள்ளதாம்,அதன்படி, முதல்வர் ஈ.பி.எஸ்.தான் என்பதை அவர் அறிவிக்க வேண்டும். அதேபோல், துணை முதல்வர் பதவி பன்னீருக்கு வழங்கப்படும்.
அவரது மூத்த மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி, இளைய மகனுக்கு தமிழக அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவி, அவரது ஆதவராளர்களுக்கு எம்.எல்.ஏ. சீட்டு வழங்கப்படும் என பேசப்பட்டுள்ளதாம்.
அதே சமயம் தேர்தலுக்கு முன் சசிகலா சிறையில் இருந்து வந்துவிடுவார் என்பதால், ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தங்களுக்கான ஆதரவு வட்டாரங்களை பெருக்கி வருகின்றன.
இதற்கிடையில், சசிகலா தரப்பில் இருந்து பன்னீர்செல்வத்திடம் தூது விடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, கட்சி பொதுச்செயலாளார் பதவி சசிகலாவுக்கு கொடுக்கப்பட வேண்டும். முதல்வர் பதவி பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படும் என பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தில் அதிமுகவில் நிலவும் சூழ்நிலைகளை புரிந்து கொண்ட பாஜகவும், ஈ.பி.எஸ்ஸின் நடவடிக்கை காரணமாகவும், அக்கட்சி மேலிடம் பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இதனால் இந்த தேர்தலில் ஓ.பி.எஸ்க்கு நல்ல கிராக்கி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.