பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிச்சட்ட மூலம் தொடர்பில்மாகாண முதலமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஒன்பது மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்பது குறித்து வினவிய போது, தனக்கு அவ்வாறான சந்திப்பு குறித்து எவ்விதமான அறிவித்தலும் கிடைக்கவில்லை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு பங்கேற்பது என்று கேள்வியெழுப்பினார்.
வடக்கு மாகாண சபையில் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய தினம் சுகாதார அமைச்சுக்கான விவாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களைக் கூட தவிர்த்து மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.