சென்னை நகரில் மட்டும் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படுகிறது.
துறுதுறு குழந்தைகள் கொஞ்சம் குண்டாக இருந்தால் பெற்றோர் பதறிப் போவார்கள். மற்றவர்களின் கேலிப் பேச்சுகளால் குழந்தைகளும் துவண்டு போகலாம். உடல் பருமன் இன்று உலகப் பிரச்சினை. குண்டு உடல் நோய்கள் தொற்ற காரணமாக அமையலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. குழந்தைகளின் உடல் பருமன் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் உள்ளன…
* இளம் பருவத்தில் எடை கூடுவது வளர்ச்சியின் ஒரு அங்கம்தான். சிலர்தான் கட்டுக்குமீறிய உடல்வளர்ச்சியை பெறுவார்கள். சாப்பாட்டு பழக்க வழக்கம் மற்றும் செயல்படும் விதம் சார்ந்து உடல் எடை அதிகரிக்கவோ, இறங்கவோ செய்யலாம்.
* வயது, வளர்ச்சி அட்டவணையைப் பார்த்து சில பெற்றோர் பயம் கொள்வது உண்டு. சில குழந்தைகள் இந்த விதிகளில் இருந்து விலக்கு பெற்று நன்கு வளர்ச்சி அடைவது உண்டு. அதனால் பயப்படத் தேவையில்லை.
* குழந்தைகள் உடல் பருமனாக இருக்க மரபுதான் காரணம் என நம்பப்படுகிறது. எனவே ‘நம்மால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. மரபணுக்களால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அது வெகு அரிதுதான். இருந்தாலும் உடல் பருமனை உடற்பயிற்சியால் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
* குழந்தைப் பருவத்தில் இருக்கும் கொழுகொழு உடல்தன்மை வளர வளர தானாக குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. குழந்தைப் பருவத்தில் இருக்கும் கொழுகொழு தன்மை, வளர் இளம் பருவத்தில் தொடரும் என்று கூற முடியாது. ஆனால் மழலைப் பருவத்தில் கொழுகொழு தன்மை கொண்டிருந்த பெரும்பாலான குழந்தைகள் வளர்இளம் பருவத்தை அடைந்த பிறகும் அதே உடல்பருமனுடன் தொடரவே செய்கிறார்கள். அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகளே மிகுதி. எனவே சிறுவயது முதலே கட்டுக்கோப்பான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் அவசியம்.
* உடல் பருமனாக உள்ள குழந்தைகளை ‘டயட்’ கடைபிடிக்க வேண்டும் என்று பெற்றோர் தாங்களாவே முடிவு செய்துவிடுவது உண்டு. இது தவறு. மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடைக் குறைப்பு முயற்சிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சீரான வளர்ச்சியுடன், உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
* தமிழகத்தில் 2005- 2006-ல் தமிழக ஆண்களில் 14.5 சதவீதம் பேர், பெண்களில் 20.9 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2015-2016-ல் ஆண்களில் 28.2 சதவீதம் பேர், பெண்களில் 30.9 சதவீதம் பேராக இந்த எணிண்ககை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
* உடல் பருமனால் நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்கள் உருவாகலாம். இவை தவிர சில நோய்களுக்கும் உடல் பருமன் காரணமாகலாம்.
* உடல் பருமனை தடுக்க அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர், வறுத்த, பொறித்த உணவுகள், நொறுக்குத்தீனி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* உலக உடல்பருமன் நாள் அக்டோபர் 13-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 2011-ல் உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உலக நாடுகள் ஒன்றுகூடி உடல்பருமனை 2025-க்குள் கட்டுக்குள் கொண்டுவர சபதம் ஏற்றுள்ளன.