ஓடிடி தளங்களின் மூலமாக திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கூடிய சூழல் விரைவில் உருவாகும் என தெரிவித்தார்.
தற்போது ஓடிடி தளங்களின் மூலமாக திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல என தெரிவித்த அவர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். எனவே இந்த பிரச்னைக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும், பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தால் அரசு உதவி செய்யும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.