ஜப்பானிய நகரமான ஒசாகாவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 1,500க்கும் அதிகமான மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சி நடந்த இந்தப் பகுதிக்கு ‘உமேடா கல்லறை என்று பெயர். 1850- 1860 ஆண்டுகளில் இருந்த உலகின் புகழ்பெற்ற ஏழு கல்லறைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் 350 சிறிய கல்லறைகளையும், நான்கு பன்றிகள், குதிரைகள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளின் உடல்களையும் கண்டுபிடித்ததாக ஒசாகா நகர நிர்வாகிகள் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 1,500 மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புதைக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒசாகா கோட்டை நகரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளாக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
கை, கால் எலும்புகளில் நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக கூறுகின்றனர். சில கல்லறைகளில் அதிகமான எலும்புகள் காணப்பட்டதாகவும், ஏதாவது ஒரு தொற்றுநோய் தொடர்பான உயிரிழப்பு காரணமாக அவர்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.