ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள தவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் நீரில் அடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்க தற்போது பருவமழை நாடு முழுவதும் தீவிரமாக பெய்யத்தொடங்கியுள்ளது. இதுவரை அஸாம், உத்தரகண்ட், பீகார், ஒடிசா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் தவி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கான்கிரிட் பாலம் ஒன்று மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் பாலம் நீரோட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆற்றில் அடித்துச் செல்வது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்ததால் 270 கி.மீ ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை இன்று இரண்டாவது நாளாக மூடப்பட்டது. திங்கள்கிழமை முதல் சாலைப் போக்குவரத்து கடுமையாக தடைபட்டுள்ளது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையும் நேற்று அதிகாலை முதல் மூடப்பட்டது. ஒரு பெரிய நிலச்சரிவு சாலையின் ஒரு பகுதியை மோசமாக சேதப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பெரும்பாலும் லாரிகள் இருபுறமும் சிக்கித் தவித்தன. இதனை அடுத்து சாலையை மீண்டும் சீரமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் கற்பாறைகள் மலை சரிவுகளில் உருண்டு வருவதால் மறுசீரமைப்பு பணிகள் தடைபட்டு வருகின்றன.
#WATCH Jammu and Kashmir: A portion of a bridge in Jammu's Gadigarh area collapses, following heavy rainfall in the region. pic.twitter.com/MPwTGefF8D
— ANI (@ANI) August 26, 2020