பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் ஒரே கருப்பின எம்.பியாக கருதப்படும் டேனியல் ஒபோனோவை அந்நாட்டு நாளிதழ் ஒன்று அடிமைபோல் சித்தரித்துள்ள விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த போராட்டங்கள் அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. அங்குள்ள மக்களும் கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலை கண்டித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் ஒரே கருப்பின எம்.பியாக கருதப்படும் டேனியல் ஒபோனோவை அந்நாட்டு நாளிதழ் ஒன்று அடிமைபோல் சித்தரித்துள்ள விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பழமைவாத கட்சிகளுக்கு ஆதரவான இதழ் என சித்தரிக்கப்படும் வலேர் அக்டுலஸ் என்கிற பிரஞ்சு இதழ் நேற்று வெளியிட்டுள்ள 7 பக்க கட்டுரையில் உள்ள புகைப்படத்தில், டேனியல் ஒபோனோவின் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு அடைமையாக இழுத்துச் செல்லப்படுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதுவே தற்போது அங்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனை அடுத்து நாளிதழின் செயலை கண்டித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் மட்டுமின்றி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கண்டனங்கள் வலுபெற்றதை தொடர்ந்து வலேர் அக்டுலஸ் நாளிதழ் இந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்த நாளிதழின் துணை ஆசிரியர் டாக்டுவல் டெனிஸ், எம்.பி டேனியல் ஒபோனோவை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக அது வெளியிடப்படவில்லை எனவும் இந்த புகைப்படம் பொதுமக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். மேலும் நான் வருத்தப்படுவது என்னவென்றால், நாங்கள் எப்போதும் இனவெறி குற்றச்சாட்டுக்கு ஆளாகிறோம். ஆனால் நாங்கள் அரசியல் ரீதியாக மட்டுமே எதிர் திசையில் இருக்கிறோம் என தெரிவித்தார்.