லெபனானில் குண்டுவெடிப்பால் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக அந்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவு பற்றாக்குறையை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் கடந்த 5ஆம் தேதி குடோனில் வைக்கப்பட்டிருந்த 3000 கிலோ அளவிலான அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதில் அந்நகரம் முழுவதும் நிலைகுலைந்ததோடு நகரத்தின் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த கோர விபத்தில் 190 பேர் உயிரிழந்தனர். மேலும் 6000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதோடு மட்டுமின்றி சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் விபத்தில் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு வருகை தறுவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்கு கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி அங்கு விபத்துக்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் பதவி விலகியதன் பிறகும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவு பற்றாக்குறையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ESCWA நிர்வாக செயலாளர் ரோலா தஷ்டி, லெபனானின் மிகப்பெரிய தானிய சேமிப்பகமான பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள பண்டகசாலைகளை புனரமைக்க அந்நாட்டு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஒரு நெருக்கடியைத் தடுக்க, அதிகாரிகள் உணவு விலைகளுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு நேரடி விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் இந்த மாத தொடக்கத்தில், லெபனானில் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் “வறுமையில் சிக்கி, அத்தியாவசிய தேவைகளுக்காக போராடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே அந்நாட்டின் ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2019 ஆம் ஆண்டு 2.9 சதவீதமாக இருந்தது. லெபனான் அதன் 85 சதவீத உணவுத் தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியுள்ளது. இந்நிலையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள பண்டகசாலைகளில் ஏற்பட்டுள்ள சேதம் ஏற்கனவே உள்ள ஆபத்தான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.