சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஜியான்பெங் நகரில் 2 மாடிகள் கொண்ட பழமையான ரெஸ்ட்ரோரண்ட் நேற்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 29 பேர் பலியானார்கள், 50 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தலைநகர் பெய்ஜிங் நகரிலிருந்து 600 கி.மீ தொலைவில் ஜியாங்பென் நகரம் அமைந்துள்ளது. இந்த நகர் அருகே இருக்கும் சென்ஹுவாங் கிராமத்தில் பழையான 2 அடுக்குமாடி ரெஸ்ட்ரோரண்ட் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கு பிறந்தநாள் இந்த ரெஸ்ட்ரோரண்ட்டில் கொண்டாடப்பட்டது. அப்போது காலை 9.30 மணி அளவில் திடீரென ரெஸ்ட்ரோரண்ட் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் அலறித்துடித்து, உயிருக்காகப் போராடினர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புப்படையினர், பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்புப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும், மோப்ப நாய்களும் ஈடுபட்டன.
அவர்களும், அப்பகுதி மக்களும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். இதில் இடிபாடுகளில் சிக்கிய 50 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர், அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7 பேருக்கு பலத்த காயங்களும், 21 பேருக்கு லேசான காயங்கலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெஸ்ட்ரோரண்ட் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக ஏதும் தெரியவில்லை, விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.