சீனாவில் கொரோனா தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகளவில் 2,54,08,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,50,881 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் கொரோனாவை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களும் அரங்கேறியுள்ளன. சுகாதார ஊழியர்களை கொலை செய்வது, குறைபாடுள்ள மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வது, பயண வரலாறு தொடர்பாக பொய்யான தகவல்களை கூறுவது என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இதுதொடர்பாக சுமார் 5,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரை இது கணக்கிடப்பட்டுள்ளது. 5,797 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6,755 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் எத்தனை பேர் காவலில் இருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான தகவல்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
சில குற்றச்செயல்களையும் நினைவுகூர்ந்து அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த வகையில் சீனாவில் சூப்பர் மார்க்கெட்டில் முகக்கவசம் அணிவது தொடர்பாக வாடிக்கையாளர்கள் இருவருக்கு இடையே நடந்த மோதலில், ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் வெப்பநிலையை கணக்கிட வந்த சுகாதார ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.