தான் பதவி விலகிய பிறகும், ஜப்பான்-அமெரிக்க உறவு மாறாமல் இருக்கும் என அதிபர் ட்ரம்ப்பிடம் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார்.
ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவி முடிவடையவிருந்த நிலையில், அவரது அறிவிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லிபரல் டெமோகிராட்டிக் கட்சியினர் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷின்சோ அபே, அமெரிக்கா- ஜப்பான் உறவு தொடர்பாக அதிபர் ட்ரம்ப்பிடம் பேசியுள்ளார். தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடர்ந்து பேணப்படும் என ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார். இதனை ஜப்பானிய அரசாங்க செய்திதொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இரு நாடுகளின் கூட்டணியை மேம்படுத்துவதற்கான கொள்கை மாறாமல் இருக்கும் என்பதால் அதிபர் ட்ரம்ப் உறுதியுடன் இருக்க வேண்டும் என ஷின்சோ அபே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் மற்றும் ஷின்சோ அபே இடையே சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. ’ஜப்பான் வரலாற்றில் மிகப்பெரிய பிரதமர்’ என அபேவை ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். புதிய ஏவுகணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கும் போது ஜப்பான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு கொண்டு ஒத்துழைக்க விரும்புவதாகவும் அபே பேசியுள்ளதாக கூறப்படுகிறது.