குழந்தைகள் என்றாலே அழகு தான், அதிலும் குழந்தைகளுக்கு கண் மை தீட்டி அழகு பார்ப்பது இன்னும் அழகாக இருக்கும். சில அம்மாக்கள் கண் மைகள் தீட்டுவது எதனால் தெரியுமா? குழந்தைகளுக்கு வளைவாக மை தடவினால் புருவத்தில் அதே போல வளைவாக முடி வளரும் என்று சிலர் நம்புகின்றார்கள்.
ஆனால் அம்மாக்கள், தங்களின் குழந்தைகளின் புருவம் மைகள் தடவினால் முடிகள் வளரும் என்று நம்பிக்கை கொள்ளும் செயல் ஒரு தவறான கற்பனை ஆகும். எனவே குழந்தைகளுக்கு கண் மைகள் தீட்டுவது நல்லதா? அல்லது ஆபத்தை ஏற்படுத்துமா என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
குழந்தைகளுக்கு கண்மைகள் தீட்டினால் என்ன நடக்கும்?
குழந்தைகளுக்கு கண்மைகள் போடுவதால், புருவத்தில் உள்ள முடியின் காம்பு, மற்றும் தோலின் மீது இருக்கும் எண்ணெய் சுரப்பியின் துவாரங்கள் அடைபட்டுவிடும். இதனால் கிருமித்தொற்றுகள் ஏற்பட்டு, முடியின் வளர்ச்சி குறைந்து, தோலில் அழற்சிகள் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு மை தடவும் போது தாயின் நகங்கள் குழந்தையின் கண்களில் சிறு காயங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
கண்மைகள் தீட்டுவதால், நுண்ணிய நோய்க் கிருமிகள் கண்களுக்கு உள்ளே சென்று, மூக்கிற்கு அருகில் இருக்கும் பகுதியில் கண்களின் கண்ணீர்ப் பைகள், சுரப்பிகள், நாளங்கள் போன்ற உறுப்புகள் அடைபட்டு அழற்சி போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
மைகளில், காரீயம் கலந்த மையை பயன்படுத்தும் போது, அது நீண்ட நாட்கள் தோலில் தங்கி, குழந்தையின் ரத்தத்தில் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு இயற்கையான மை தயாரிப்பது எப்படி?
குழந்தைகளுக்கு போடும் கண்மைகள் நாம் கடைகளில் விற்பதை வாங்கி போடுவதை தவிர்த்து நமது வீட்டிலேயே வேதிப் பொருட்கள் கலக்காமல் கண்மை தயாரிக்கலாம்.
பித்தளை, வெங்கலம், செம்பு ஆகியவற்றில் ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில், சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையால் அரைத்துத் தயாரிக்கப்பட்ட சந்தனத்தை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக லேசாக தடவ வேண்டும்.
பின் செங்கற்களை அடுப்பு மாதிரி அமைத்து, கெட்டியான நூல் அல்லது பஞ்சுத் திரியைபோட்டு நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணையை ஊற்றி ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பின் 3 நாட்கள் நிதானமாக கொழுந்துவிட்டு தீபம் எரிய வேண்டும். அதற்குத் தகுந்தவாறு விளக்கு தயார் படுத்திக் கொள்ளவும்.
சந்தனம் தடவிய பாத்திரத்தில், முக்கால் பாகம் சாதாரண தண்ணீர் நிரப்பி இந்த செங்கல் அடுப்பில் வைக்க வேண்டும்.
பின் எரியும் தீ பட்டு சந்தனம் நன்கு கறுத்து உதிர ஆரம்பிக்கும் அப்போது முழுவதும் கரிந்து போன அந்த சந்தனத்தை சுத்தமாக சேகரித்து கலப்படமில்லாத விளக்கெண்ணை சிறிது சேர்த்து சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான விரல்களால் கை பதத்திற்கு இழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வேதிப் பொருட்கள் கலக்காத சுத்தமான கண்மை தயார். இயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த கண்மையை நெற்றியில் பொட்டு வைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
பின் இந்த கண்மையை சுத்தமான விரல்களால் நகம் படாமல் கொஞ்சமாக எடுத்து குழந்தைகளின் கண்களுக்குத் தீட்டலாம். இதனால் குழந்தைகளுக்கு எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.