சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் அது குறித்து மீள் பரிசீலினை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்துகின்றது.
இந்த நிலையில் குறித்த சீன நிறுவனத்தை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்ததுடன் அந்த நிறுவனம் சார்ந்தவர்களுக்கு தமது நாட்டிற்கு பிரவேசிக்காவண்ணம் தடையும் விதித்துள்ளது.
அந்த வகையில், ஆகஸ்ட் 26ம் திகதி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தென்சீனா கடற்பரப்பில் கட்டுமானப்பணிகள் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகளுக்கு எதிராகவும், கடலோர வளங்களை பயன்படுத்துவதற்கான உரிமையை கோரிய தென்கிழக்காசிய நாடுகளுக்கு எதிராக பலவந்தத்தை பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் விசா தடையை விதித்துள்ளது.
இந்த தனிநபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் . அவர்களினது குடும்ப உறுப்பினர்களும் விசா கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும் அமெரிக்காவின் வர்த்தக திணைக்களம் சீன அரசாங்கத்தின் 24 நிறுவனங்களை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது. சீனா தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்தின் பல துணை நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த தடைகளின் அடிப்படையில் அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்கள் சிலவற்றைபட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட அனுமதிப்பத்திரம் அவசியம் .
2013 முதல் சீனா தனது அரச நிறுவனங்களை பயன்படுத்தி தென்சீன கடலில் 3000 ஏக்கர் பகுதியை அகழ்வது மற்றும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது .
இதன் மூலம் அந்த பகுதியை ஸ்திரதன்மை இழக்கசெய்துள்ளதுடன் அயல்நாடுகளின் இறைமையை காலில் போட்டு மிதித்துள்ளதுடன் சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்சீனா கடல்பகுதியில் அகழும் பணிகளுக்கு சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனம் தலைமை தாங்கியுள்ளது, மேலும் சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்துக்கு பயன்படுத்தும் முக்கிய நிறுவனமாகவும் இது காணப்படுகின்றது.