மாற்றுத்திறனாளிகளுக்கான ரியோ பாரா ஒலிம்பிக்கில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையுடன் தேசத்திற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.2 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2 கோடி, வெள்ளி வென்றால் ரூ.1 கோடி, வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் என உயர்த்தி வழங்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19-12-2011 அன்று உத்தரவிட்டு இருந்தார். இதே போல் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்பவர்களுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் என ஊக்கத்தொகையை உயர்த்தினார்.
செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த த.மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
இதன்படி மாரியப்பனுக்கு ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (நேற்று) வழங்கி வாழ்த்தினார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.