நாட்டில் மீண்டும் யுத்தம் என்ற பேச்சுக்கே இடமளிக்கப்படக் கூடாதெனவும் அதற்கு உரிய விதத்தில் புரையோடிப் போன இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி இருக்கும் பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைவான தீர்வைக் காணும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
2015 ஜனவரி 8ல் நாட்டு மக்கள் இன, மத, மொழி பேதம் கடந்து வழங்கிய ஆணையின் மூலம் அதனையே உறுதிப்படுத்தியிருந்தனர் என்பதையும் பேராயர் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சகல மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை இந்த மண்ணில் ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை குறைவின்றி வழங்குவதாகவும் பேராயர் உறுதியளித்திருக்கிறார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய நத்தார் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த பகிரங்க வேண்டுகோளை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்திருக்கிறார்.
இந்த வைபவத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை சகல இன மக்களாலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.
2017ம் ஆண்டை அரசாங்கம் வறுமை ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் இவ்வாறான சூழ்நிலையில் அடுத்த பல மாதங்களுக்கு நாட்டில் வரட்சி நீடிக்குமெனவும் காலநிலை அவதான நிலையம் அறிவித்திருப்பதாகவும் கூறியிருக்கும் ஜனாதிபதி, இது தமக்கு பெரும் கவலையளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தாம் இன, மத, மொழி பேதம் கடந்து சகல மத வழிபாட்டுத் தலங்களிலும், பொது மைதானங்களிலும் ஒன்றுகூடி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை தொடராக முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டிருக்கிறார்.
அரசர்கள் ஆண்ட காலத்தில் மழைக்காக வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளை அரசர்கள் முன்னின்று நடத்தியது போன்று ஜனாதிபதி நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
நாட்டில் மத நல்லிணக்கம், இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் மக்களுக்கிடையே புரிந்துணர்வு முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மதங்களினால் தாம் துருவங்களாக மாறுவதை விட அந்த மதங்களின் போதனைகள் எதைக் கொள்கின்றன என்பதை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும்.
பௌத்தம் எதைப் போதிக்கின்றது. கிறிஸ்துவின் போதனை என்ன, இந்து தர்மம் எதைச் சொல்கிறது, இஸ்லாம் தந்த குர்ஆன் போதனை எதைச் சொல்கிறது இவற்றைப் படிப்பதால் எந்த தீயவிளைவுகளும் ஏற்படப் போவதில்லை.
அதனூடாக நல்ல புரிந்துணர்வு ஏற்பட முடியும். அந்த புரிந்துணர்வுப் பாதையில் நாம் ஒன்றுபட்டுப் பயணித்தால் எமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள முடியும், எமக்குத் தீர்வு தேடித்தர வெளியே இருந்து யாரும் தேவைப்பட மாட்டாது.
இந்த மண் புண்ணியம் செய்த மண். இங்கு உலகின் மிகப் பெரிய மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அது பல நூற்றாண்டுகளாக தாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளோம். அந்த ஒற்றுமை இடைப்பட்ட காலத்தில் சிறிதளவு பழுது பட்டது.
நாம் இலங்கையர் என்பதை மறந்து இன, மத ரீதியாக பிளவுபட்டதே அதற்குப் பிரதான காரணமாகும். அந்தப் பிரிவினையால் நாடு எதிர்கொண்ட நெருக்கடியானது நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச் சென்றது.
இழப்புகள் எண்ணிலடங்காதவை. இனிமேலும் இவ்வாறான இழப்புகளுக்கு நாடு முகம் கொடுக்க முடியாது.இனவாதம் எங்கிருந்து வந்தாலும் இன, மத, மொழி பேதம் பாராது முறியடிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் சக்திகளை அடையாளம் கண்டு அந்தச் சக்திகளை தோற்கடிக்க வேண்டும்.
நாட்டில் இன நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்தி பொருளாதாரத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பும் நல்லாட்சி அரசின் திடசங்கற்பத்துக்கு நாமனைவரும் இன மத மொழி பாராது இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
உண்மையான தேசப்பற்று இதன் மூலமே உறுதி செய்யப்பட முடியும்.அதே சமயம் காலநிலை ஏற்றத்துக்கு மாற்றமாகவே காணப்படுகின்றது.
அன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழை வீழ்ச்சியுடன் குளங்கள், ஆறுகள் நிரம்பி வழியும் நாடு செழிப்பானதாக காணப்படும். ஆனால் அடுத்த சில மாதங்களுக்கு இன்றைய வரட்சி தொடருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது எமக்குப் பெரும் சோதனையான காலமாகும்.
எனவே ஜனாதிபதியினதும், அரசினதும் வேண்டுகோள் பிரகாரம் நாட்டு மக்கள் அனைவரும் தத்தமது சமய ஆசாரங்களின் படி பிரார்த்தனை மற்றும் பூஜை, தொழுகை வழிபாடுகளில் ஈடுபட்டு மழை வேண்டிப் பிரார்த்திப்பது ஒவ்வொருவரதும் கடப்பாடாகும்.
தூய உள்ளத்தோடும், நல்லெண்ணத்தோடும் மேற்கொள்ளப்படும் பிரார்த்தனைகள் நிச்சயமாக இறை சன்னிதானத்தில் குறைவின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.