இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் எல்லைப் பிரச்னை தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே உயர் நிலை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், சுமூக தீர்வு ஏற்படவில்லை. சீனா மீண்டும் எல்லையில் அத்துமீறியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமைதியை மட்டுமே விரும்புவதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், எல்லைப் பிரச்னையை தீர்க்க இந்தியா-சீனாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். நிலைமை மோசமாக உள்ளதாகவும், பெரும்பாலானோர் நினைப்பது போல் அல்லாமல், பிரச்னை மிகவும் வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியா மற்றும் சீனாவுக்கு நாங்கள் உதவத் தயாராக உள்ளோம். எல்லையில் பதற்றத்தைத் தணிக்க என்ன செய்ய முடியும் என்பது குறித்து இரு நாடுகளுடனும் தொடர்ந்து பேசி வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
முன்னதாக, கல்வான் மோதலின் போது மத்தியஸ்தம் செய்யும் ட்ரம்பின் யோசனையை இந்தியாவும் சீனாவும் நிராகரித்து விட்டன. இந்த விவகாரத்தில் 3-வது நாட்டின் தலையீடு தேவையில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.