திருவண்ணாமலை அருகே மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் மரணமடைந்ததாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மனைவி விண்ணரசி கடந்த 1-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் யோகேஷ்வர் என்பவர் விண்ணரசிக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார். விண்ணரசி நர்சிங் பயின்றுள்ள நிலையில், தனக்கு மயக்க மருத்து கொடுக்க வேண்டிய நிலை இல்லை என தெரிவித்துள்ளார். அதை ஏற்காத மருத்துவர், விண்ணரசிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் விண்ணரசிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட, பின்னர் அதே தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அதிகாலை விண்ணரசி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் விண்ணரசி உயிரிந்ததாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.