சம்பள உயர்வு வழங்கப்படாமை, சம்பளம் மீளாய்வு செய்யப்படாமை ,உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபையின் புதிய அரசபொது ஊழியர்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்றய தினத்திலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகரசபை வாயிலில் ஒன்றுகூடிய அவர்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் நேற்று காலை7 மணிக்கு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கு,தீலிபன், செ.கயேந்திரன், காதர் மஸ்தான் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியதுடன், இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.
உறுதிமொழிகளிற்கமைய இன்றைய தினம் தமது போராட்டத்தை முடித்துக்கொள்ளவிருந்த நிலையில் நகரசபை செயலாளரின் தன்னிச்சையான முடிவினால் தமது போராட்டத்தை மீண்டும் தொடர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,
எமக்கான தீர்வினைகோரி நாம் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், சபையின் செயலாளர் இரவோடிரவாக தன்னிச்சையான முடிவினை எடுத்து இரண்டு ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளார்.
இது எமக்கு வேதனையளிப்பதாக உள்ளதுடன், இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே நாம் பார்கின்றோம். நகரசபை செயலாளரே அனைத்தையும் செய்பவரானால் உறுப்பினர்களிற்கு எந்த அதிகாரமும் இல்லையா?அவர்கள் சபையில் எடுத்த தீர்மானம் கூட செல்லுபடியற்றது என்று அவர் சொல்கிறார்.
இதன் மூலம் வெறுப்புணர்வூட்டும் செயற்பாட்டையே அவர் மேற்கொள்கின்றார். எனவே நாம் தொடர்ந்து போராடுவதற்கு நகரசபை செயலாளரே மூல காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.