பூசா சிறைச்சாலையின் சிறப்பு பிரிவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. 39 கைதிகள் நேற்று போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், இன்று 29 கைதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பூசா சிறைச்சாலையின் சிறப்பு பிரிவில் உள்ள அனைத்து கைதிகளும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள். மொத்தம் 45 கைதிகள் அங்குள்ளனர். அவர்களில் 39 பேர் பல கோரிக்கைகளின் அடிப்படையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் வருகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தமை, சிறைச்சாலைக்கு வருகை தரும் பெண்களை பரிசோதிக்கும் பணியில் ஆண் சிறை அதிகாரிகள் ஈடுபடுகின்றமை, உறவினர்களுடன் பேசுவதற்கான தொலைபேசி வசதிகளை நிறுத்திவைத்தமை, சிறை சிற்றுண்டிச்சாலையில் மாதாந்தம் பொருட்களை வாங்கும் பணத்தின் அளவை 8,000 ரூபாவிலிருந்து அதிகரிக்க கோருகின்றமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
எனினும், கைதிகளின் எந்தவொரு கோரிக்கை தொடர்பிலும் பேச்சில் ஈடுபட தயாரில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.