மியான்மரில் புத்த துறவி ஒருவர், வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை மறுபயன்பாட்டிற்கு மாற்றி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
யாங்கோன் நகரில் தபர்வா தியான மையத்தை நடத்தி வருபவர் துறவி அப்போட் ஒட்டமசாரா. தற்போதைய கொரானா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் வீசி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் நகரமே சுகாதார சீர்கேட்டில் இருப்பதை பார்த்து அவர் மனம் வருந்தினார். இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கத் தொடங்கினார்.
யாங்கோனில் தினமும் சுமார் 2,500 டன் குப்பைகள் சேர்ந்தாலும் அதனை முறையாக எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதனை சாலைகளிலும் நீர்வழிகளிலும் கொட்டிச் செல்கின்றனர். இதனையடுத்தே துறவி ஒட்டமசாரா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார், அவற்றில் சில பொருட்களை உணவு வைக்கும் பாத்திரங்களாக மறுசுழற்சி செய்துள்ளனர். டயர் போன்ற மற்ற சில பொருட்களைக் கொண்டு தியான மையத்தின் சுவர் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தியான மையம் நன்கொடையாக கேட்பதால், பிளாஸ்டிக் கழிவுகளை மக்கள் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று அவர் கூறுகிறார். மறுசுழற்சி செய்வதால் பணம் சேமிக்கப்படுவதுடன் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்னையும் தீர்வதாக அவர் குறிப்பிடுகிறார். இதுவரை இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒன்பது ஏக்கர் பரப்பளவில் உள்ள தியான மையத்தில் இதற்கான பட்டறைகள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒட்டமசாராவின் இந்த செயலால் யாங்கோன் நகரம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நகரமாக மாறி வருகிறது.