வாழ்நாள் முழுவதும் தன்னை வழிநடத்தி, உத்வேகம் அளிப்பவர் தனது தாயார்தான் என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தியாவில் பிறந்த தனது தயார் ஷ்யாமளா கோபாலன் மற்றும் சென்னை பயண அனுபவம் குறித்தும் அவ்வப்போது பேசி வருகிறார். இந்நிலையில் தனக்கு அறிவுரைகள் வழங்கி, வாழ்நாள் முழுவதும் தன்னை வழிநடத்தி, உத்வேகம் அளிப்பவர் தனது தாயார்தான் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘எதையும் புகார் செய்து கொண்டு இருக்கக் கூடாது என எனது தாய் கூறுவார். பிரச்சனைகளுக்கு தீர்வு காண போராட வேண்டும் என்றும், எதுவாக இருந்தாலும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறுவார். நான் என்ன செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறாரோ அதனை நான் உடனடியாக நிறைவேற்ற நினைப்பேன். எப்போதும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவே நினைப்பேன். பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பரபரப்பான சூழலிலும், அவர்களுடன் நேரத்தை செலவிட்டு சமையல் செய்து கொடுக்கிறேன்’ என்றார்.
மேலும் அக்கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் பற்றியும் பேசியுள்ளார். தன்னை துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றியுடையவராக இருப்பதாகவும், ஜோ பிடனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.