தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 சென்டி மீட்டர் மழையும், சேலம், மற்றும் பந்தலூரில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், கோவை சோலையார், தஞ்சை, மேல் பவானி, வால்பாறை, கோத்தகிரி பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.