இலங்கை மாணவர் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி அவர் ஒருமாதம் தடுத்து வைக்கப்பட காரணமாக இருந்த அவுஸ்திரேலியரான ஆர்சலன் தாரிக் கவாஜா, தாம் ஒரு கோழை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு, இலங்கை மாணவனான மொஹட் கமீர் நிஸாம்தீன் என்பவர் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்கான பொய்யான குறிப்புக்களை அவருடைய குறிப்பு புத்தகத்தில் வைத்து அவர் தொடர்பில் காவல்துறையினருக்கு தாரிக் கவாஜா தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவர் ஒரு மாதக்காலம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் விசாரணைகளின்போது அவருடைய குறிப்பு புத்தகத்தில் அவுஸ்ரேலியரான கவாஜாவே பயங்கரவாதம் தொடர்பான குறிப்புகளை வைத்தார் என்பது தெரியவந்தது.
இலங்கை மாணவனுக்கு எதிராக இந்த காரியத்தை செய்வதற்கு அவர் ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த உறவில் தாம் பொறாமைக்கொண்டதே ஆகும் என்று கவாஜா நீதிமன்றில் தெரிவித்தார்.
இலங்கை மாணவருக்கு மாத்திரமல்ல. ஏற்கனவே மற்றும் ஒருவரும் பெண் ஒருவருடன் கொண்டிருந்த தொடர்பில் பொறாமைக்கொண்டு குறித்த அவுஸ்திரேலியர் அவர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டை சுமத்தியிருந்தாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் தாம் ஒரு கோழை என்று அழுதவாறு குறிப்பிட்ட கவாஜா இலங்கை மாணவரான நிஸாமுதீன் ஒரு உயர்ந்த மனிதர் என்றும் தெரிவித்தார்.