ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எரிவாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. அதே நேரம் பலரும் இரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பார்கள்.
ஒன்று காலியானதும், அதை ஒதுக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு புக் செய்து விடுவார்கள்.
ஆனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடான நேரத்திலும், ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளிலும் இது மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதை மிக எளிய முறையில் சமாளித்து விடலாம். சில சூட்சமங்கள் மூலம் நம் வீட்டில் எரிவாயு உருளையில் கேஸ் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் இப்பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.
சிலிண்டரில் இருக்கும் நம்பரை தெரிந்துகொள்ளுங்கள்
பொதுவாகவே சிலிண்டர் வாங்கும்போது அதில் எண் இருக்கும். அதிலும் ஏ,பி,சி,டி என போட்டு எண் போடப்பட்டு இருக்கும். இந்த ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் வரை என்பதைக் குறிக்கும். அதேபோல் பி, சி.டி ஆகியவை அடுத்தடுத்த மூன்று மாதங்களை குறிப்பவை.
இந்த ஆங்கில எழுத்தின் கூடவே ஒரு எண் இருக்கும். அது வருடத்தைக் குறைப்பது. அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வருட, மாதத்தோடு அந்த சிலிண்டரின் கால அளவு முடிகிறது என்பது இதன் பொருள். அதற்கு மேல் அதை பயன்படுத்தினால் வெடிக்கும் அபாயமும் உண்டு.
சிலிண்டரின் அளவை எவ்வாறு தெரிந்து கொள்வது?
முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும். நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும்.
இப்படிப் போடும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும். அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும்.
கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். இனி சமைத்துக் கொண்டிருக்கும் போதே கேஸ் காலின்னு ஒரு சிக்கல் வரவே வராது!.