இராணுவ புலனாய்வு பணியகம் (டி.எம்.ஐ) மற்றும் அரசப்புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்) என்பன நாட்டுக்குள் தடை செய்யப்பட வேண்டிய ஆறு இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் குறித்த விபரங்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடம் சமர்ப்பித்துள்ளன.
எனினும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் பட்டியலில் மூன்று குழுக்களை மாத்திரமே குறிப்பிட்டிருந்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த தேசியப் புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் இதனை தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், தாமும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே), ஜமாத் மில்லத் இப்ராஹிம் மற்றும் விலாயத் ஆகிய மூன்று அமைப்புக்களின் விபரங்களை குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார்.
2019, ஏப்ரல் 21 இடம்பெற்ற ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் இந்த அமைப்புகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதால், மூன்று அமைப்புகளையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு குறித்த கடிதத்தில் கோரியிருந்ததாக அவர் கூறினார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் டி.எம்.ஐ மற்றும் எஸ்.ஐ.எஸ் தடை செய்ய விரும்பிய மற்ற மூன்று இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஏன் முன்னாள் ஜனாதிபதிக்கான கடிதத்தில் குறிப்பிடவில்லை என்று ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியை வினவினர்.
இதற்கு பதிலளித்த சாட்சி, ஓல் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் , இலங்கை தவீத் ஜமாஅத் மற்றும் இலங்கை தவீத் ஜமாத் ஆகிய மூன்று அமைப்புகளும் தீவிரவாத கருத்துக்களைக் கொண்டிருந்தன, ஆனால் மற்ற அமைப்புகளைப் போன்று பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படவில்லை என்று கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்தவொரு நேரடி தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்று கோரவில்லை என்று சிசிர மெண்டிஸ் குறிப்பிட்டார்.